Published : 06 Dec 2019 11:31 AM
Last Updated : 06 Dec 2019 11:31 AM

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: வட இந்தியர்களை தமிழ்நாட்டுக்குள் திணிக்கும் முயற்சி; வேல்முருகன் விமர்சனம்

வேல்முருகன்: கோப்புப்படம்

சென்னை

'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் மூலம் வட இந்தியர்களை தமிழ்நாட்டுக்குள் மத்திய அரசு திணிக்கப் பார்க்கிறது என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (டிச.6) வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் வரும் ஜூன் மாதம் முதல் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் அமல்படுத்தப்படும் என்று 3.12.2019 அன்று மக்களவையில் தெரிவித்தார் அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான். இத்திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்தப்படும் என்றும், பணி நிமித்தமாக நாட்டின் எந்தப் பகுதிக்கு தொழிலாளா்கள் இடம்பெயர நேரிட்டாலும் அவா்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' என்பது சரியா? முதலில் ஒரே நாடு என்பதே ஏமாற்று வேலையாகும். அரசுகளின் ஒன்றியம் என்றுதான் குறிப்பிடுகிறது அரசமைப்புச் சட்டம். பல்வேறு தேசிய இன அரசுகள் கூட்டாட்சித் தத்துவத்தில் சேர்ந்தியங்கும் நாடு என்பதுதான் உண்மை.

ஒரே ரேஷன் கார்டு என்றால் ஏழை, பணக்காரன், நடுத்தர வர்க்கத்தவன் எல்லாருக்குமே ஒரே ரேஷன் கார்டா? வீடற்றவர்கள், நாடோடிகள், சாலையோரம், தெருவோரம் கிடக்கும் விளிம்பு நிலை மக்கள் ஆகிய இவர்ககளுக்கெல்லாம் ரேஷன் கார்டே கொடுப்பதில்லையே! ஆக ஒரே ரேஷன் கார்டு என்பதும் மோசடியேயாகும்.

ஏமாற்று வேலை + மோசடி ஏன்? அதைத்தான் உணவு அமைச்சர் சொல்லிவிட்டாரே! "பணி நிமித்தமாக நாட்டின் எந்தப் பகுதிக்கு தொழிலாளா்கள் இடம் பெயர நேரிட்டாலும் அவா்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற முடியும்".

இது சூசகம்தான். ஆனால் உள்நோக்கம் வேறு; அது, வாழ்வியலின் எந்த ஒரு பிரச்சினைக்காகவும் போராட்டத்தில் இறங்கிவிடாதபடி மக்களை தங்களின் சொந்த இடத்தை விட்டு இடம்பெயரச் செய்து, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் குடியேறச் செய்வதேயாகும். அந்த அளவுக்கு சுதந்திர இந்தியாவில் வட மாநிலங்கள், குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்கள் வறுமையில், கல்வியின்மையில், அறியாமையில் உழலுகின்றன; இவைதான் பாஜகவை ஆட்சி பீடமேற்றிய வாக்கு வங்கிகள்.

தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தை திமுக ஆட்சியின்போது உச்ச நீதிமன்றமே உச்சி முகர்ந்து பாராட்டியது. அதை அடியோடு ஒழித்துவிடும் மத்திய அரசின் சதி-சூழ்ச்சிக்கு இரையாகித்தான் தமிழக அரசின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய உணவுத்துறை அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொண்டு, 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தில் தமிழ்நாடும் இணையும் என்றார். அதனை அப்படியே ஆமோதித்தார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு.

இதனால்தான் தமிழக அரசை பாஜகவின் பினாமி அரசு என்றும் அதிமுக அமைச்சர்களை பாஜகவின் அடிமைகள் என்றும் மக்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது புலனாகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த வரையில் அவர் மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோதோ, இதுதான் தக்க தருணம் என்று உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை 1.11.2016 முதல் அமல்படுத்தியது தமிழக அதிமுக அரசு. 16.2.2018 இல் அச்சட்டத்தின்படி மாநில உணவு ஆணையத்தையும் ஏற்படுத்தினார்கள். அவ்வளவுதான் இன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 35,279 ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை.

இது தமிழக அரசு செய்த சாதனையன்றி வேறென்ன? இப்போது தாங்கள் செய்த சாதனையை தாங்களே வேறொரு சாதனை மூலம் முறியடிக்கப் பார்க்கிறார்கள். அதாவது மத்திய அரசின் விருப்பப்படி, ரேஷன் கடைகளையே பொது விநியோக முறையையே ஒழித்துக் கட்டுவதுதான் அந்த இமாலயச் சாதனை.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகள், மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள பணிகள் மற்றும் ரயில்வே பணிகள், வங்கிப் பணிகள் யாவற்றிலும் வட இந்தியர்களை, குறிப்பாக இந்தி பேசுவோரையே குவித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. அதோடு, வட மாநிலத் தொழிலாளர்களே தமிழ்நாடு முழுவதும் உள்ள முறைசாராப் பணியிடங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவை போதாதென்று எஞ்சியுள்ள வட இந்தியர்களையும் இந்த 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்குள்ளேயே திணிக்கப் பார்க்கிறது மத்திய அரசு. இதன் மூலம் தமிழ்-தமிழர்-தமிழ்நாடு என்ற அடையாளத்தை அழிப்பதே மத்திய அரசின் மறைமுகத் திட்டம். இதற்குத் துணைபோகிறது தமிழக அரசு.

எனவேதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தன் தொலைநோக்குச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது:

மாநிலம், பொது விநியோக முறையை ஒழித்தல் மற்றும் பிரச்சினைகளுக்காக போராடிவிடாதபடி மக்களை தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் குடியேறச் செய்தற் பொருட்டே இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு!

இதில் தமிழ்நாடு இணையும் என அமைச்சர்கள் காமராஜும் செல்லூர் ராஜும் தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தை தமிழ்நாடு ஏற்கக் கூடாது" என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x