Published : 06 Dec 2019 08:51 AM
Last Updated : 06 Dec 2019 08:51 AM
தனியாரை நம்பி மக்கள் அவதிப்படுவதைத் தடுக்க, ரூ.12 கோடியே 50 லட்சத்தில் 50 கழிவுநீர் சேகரிப்பு லாரிகளை வாங்குகிறது சென்னை குடிநீர் வாரியம். சென்னையில் உடனடி கழிவுநீர் இணைப்பு பெறுவதற்காக முதல் வர் பழனிசாமி அறிவித்த திட்டப் பணிகள் தீவிரமாக செயல் படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் தனி வீடு, அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக நிறு வனங்கள் கட்டிய பிறகு அதற்கு கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். 3 மாதங்கள் முதல் ஆண்டுக் கணக்கில்கூட ஆனது என்று மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
மேலும், வீடுகளில் தேங்கும் செஃப்டிக் டேங்க் கழிவுநீரை லாரிகள் மூலம் அகற்றும் தனியார் அதிக கட்டணம் வசூலிப்பது, குறிப்பிட்ட நேரத்தில் வந்து கழிவுநீரை எடுக்காதது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அத்துடன் கழிவு நீர் இணைப்பு வாங்கிக் தருவதாகக் கூறி தனியார் ஏமாற்றுவதாகவும் புகார் உள்ளது.
இந்நிலையில், மக்களின் சிரமங் களைப் போக்கவும், சென்னை மாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பெரும் நிறுவனங்களில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால் வாய் ஆகிய ஆறுகளை மாசு படுத்துவதைத் தடுக்கவும் முதல்வர் பழனிசாமி அண்மையில் இரண்டு திட்டங்களை அறிவித்தார்.
அழைத்தாலே போதும்
‘அழைத்தால் இணைப்பு’ என்று பெயரிடப்பட்ட அத்திட்டத்தின்படி, 044 -4567 4567 என்ற எண்ணில் அல்லது www.chennaimetrowater.tn.gov.in என்ற சென்னைக் குடிநீர் வாரிய இணையதளம் மூலமாக வும் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். ‘அழைப்பு இணைப்பு’ திட்டத்தின்படி சென்னையில் உள்ள தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள் (மூன்று மாடிகள்) வரை யுள்ள கட்டிடங்களுக்கு எவ்வித ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண் டாம். கட்டணத்தையும் உடனே செலுத்தத் தேவையில்லை. வேறு எந்தத் துறையையும் அணுக வேண்டாம்.
பதிவு செய்த 15 நாட்களுக்குள் கழிவுநீர் இணைப்பு வழங்கப் படும். கழிவுநீர் இணைப்பு கொடுத்த 24 மணி நேரத்துக்குள் சாலை வெட்டுக்கள் தரமாக சரிசெய் யப்பட்டு, போக்குவரத்துக்கு ஏற்ற தாக மாற்றித் தரப்படும். இணைப்பு வழங்கிய பிறகு சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண் டிய தொகை கணக்கிட்டு கூறப் படும். அத்தொகையை ஒரே நேரத் தில் முழுமையாகவோ அல்லது 5 ஆண்டுகளில் 10 தவணைகளாகவோ செலுத்தலாம்.
விரிவாக்கப் பகுதிகளில்..
‘இல்லந்தோறும் இணைப்பு’ என்ற மற்றொரு திட்டத்தின்படி, விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதி களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கட்டமைப்பு களுடன், கழிவுநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியமே தாமாக கழிவு நீர் இணைப்பு வழங்கும்.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில், இதுவரை 8 லட்சம் வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. மற்ற பகுதிகளில் பாதாள சாக் கடைப் பணிகள் முடிந்ததும் கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, அம்பத்தூர், ஆவடி, பள்ளிக்கரணை, மணலி, சின்னசேக்காடு, காரம்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட இடங் களில் பாதாள சாக்கடை அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடிநீர் இணைப்பு பெற்றுத் தரு வதாக யாராவது தனியார் கூறி னால், அவர்களை நம்பி பணம் தர வேண்டாம். முதல்வர் அறிவித் துள்ள திட்டங்களின் கீழ் எளிய முறையில் கழிவுநீர் இணைப்பு பெறலாம்.
தரைத்தளம், முதல்தளம், 2-ம் தளம் உள்ள குடியிருப்புகளுக்கு உடனடியாக கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும். அதற்கு மேல் மாடிகள் கொண்டு குடியிருப்பு களுக்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) கட்டிடம் முழுமை பெற்றதற்கான சான்றிதழ் (Completion Certificate) இருக்க வேண்டும். இந்த சான்றிதழ் இருக்கும் குடியிருப்புகளுக்கு மட்டுமே கழிவுநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அத னால்தான் இந்த சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
கழிவுநீர் இணைப்பு இல்லாத வீடுகளில் செஃப்டிக் டேங்க் கழிவுநீரை எடுக்கும் வேலையைச் செய்யும் தனியாரால் ஏற்படும் சிரமத்தைப் போக்குவதற்காக சென்னை குடிநீர் வாரியம் தலா ரூ.25 லட்சம் மதிப்புள்ள கழிவுநீர் எடுக்கப் பயன்படுத்தப்படும் 50 லாரிகளை விரைவில் விலைக்கு வாங்கவுள்ளது.
புதிய திட்டத்தின்படி கழிவுநீர் இணைப்பு கொடுத்த பிறகு, இணைப்புக் கட்டணம், ஒரு சதுர மீட்டர் என்றளவில் உள்கட்டமைப் புக் கட்டணம், சாலையைத் தோண்டி குழாய் பதித்தல், பின்னர் சாலையை மூடுதல் ஆகியவற்றுக்கான மூலப் பொருட்களுக்கான செலவு ஆகியன வசூலிக்கப்படும். குடி யிருப்புக்கு ஏற்ப 4 அல்லது 6 அங் குலத்தில் குழாய் பதிக்கப்படும்.
340 பேர் பதிவு
மேற்கண்ட பணிகள் அனைத்தும் சென்னை குடிநீர் வாரியத்தில் பதிவு செய்துள்ள 350 ஒப்பந்ததாரர்கள் மூலம் உரிய முறையில் சரிவர செய்யப்படும். சென்னை மாநகராட்சி, காவல் துறை, தேவைப்பட்டால் நெடுஞ் சாலைத் துறையுடன் குடிநீர் வாரியமே உரிய அனுமதி பெற்ற கழிவுநீர் இணைப்புப் பணியை முழு மையாக முடித்துக் கொடுக்கும்.
முதல்வர் அறிவித்த திட்டத்தின் படி, இதுவரை 340 பேர் கழிவுநீர் இணைப்புக் கோரி பதிவு செய்துள்ள னர். அடுத்த வாரத்தில் இருந்து கழிவுநீர் இணைப்பு கொடுக்கும் பணி தொடங்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT