Published : 05 Dec 2019 08:53 PM
Last Updated : 05 Dec 2019 08:53 PM

மேட்டுப்பாளையம் விபத்து; போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெற சீமான் வலியுறுத்தல்

கோவை

மேட்டுப்பாளையம் விபத்தின்போது நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

மேட்டுப்பாளையம், நடூரில் சுவர் இடிந்து விழுந்து விபத்து நேரிட்ட பகுதியை இன்று பார்வையிட்ட சீமான், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''பொறுப்பற்ற செயலால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். வெறும் கற்களை வைத்து, சிமெண்ட் கலவை பூசாமல் சுவரைக் கட்டியுள்ளனர். உரிமையாளர் வீட்டுக் கழிவு நீர் இந்தச் சுவர் அருகே விடப்பட்டுள்ளது. இதை நான் தீண்டாமைச் சுவராகத்தான் பார்க்கிறேன். சுவர் குறித்து சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்களிடம் புகார் கூறச் சென்றவர்களை நாயை விட்டுத் துரத்தியுள்ளனர்.

வீடு இடிந்தவர்களுக்கு, அவர்கள் குடியிருந்த இடத்திலேயே வீடு கட்டித் தந்தால்தான் ஆறுதலாக இருக்கும். நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது தவறு. இந்த வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்.
இந்தச் சுவர் பாதுகாப்பற்றது என்று ஏற்கெனவே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு அளிக்கப்பட் இழப்பீடு போதுமானதா?
இறந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவசரம் அவசரமாக அவர்களது உடலை எரித்துள்ளனர்''.

இவ்வாறு சீமான் கூறினார்.

விஜய பிரபாகரன் ஆய்வு

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மேட்டுப்பாளையம் நடூரில் விபத்து நேரிட்ட பகுதியை இன்று பார்வையிட்டதுடன், இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அவர் கூறும்போது, "இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x