Published : 05 Dec 2019 05:02 PM
Last Updated : 05 Dec 2019 05:02 PM
மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டிய தடுப்பணைகளில் தண்ணீரை தேக்காமல் 'ஷட்டர்' வழியாகத் திறந்துவிடப்பட்டதால், நகரின் நீர் ஆதாரத்தை ஒரு அடிக்கு கூட மேம்படுத்த முடியவில்லை.
மாறாக கழிவு நீர் தேங்கி நகிரன் சுகாதாரம் மட்டுமே பாதிக்கப்பட்டதால் அதற்காக ஒதுக்கிய ரூ.20 கோடி நிதி விரயமாகியுள்ளது.
தென் தமிழகத்தில் மதுரை, தேனி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது. பெரியாறு, வைகை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் வைகை ஆற்றில் கடந்த சில வாரமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கடலுக்கு செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. அதேபோல வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தில் இந்த ஆண்டு பெய்த மழையால் ஏராளமான தண்ணீர் கடலுக்கு சென்றுகொண்டிருக்கிறது.
இவ்வாறு கடலுக்குச் செல்லும் தண்ணீரை தேக்குவதற்கு அரசியல் தலைவர்கள் என பலரும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தீர்வாக முன்மொழிகிறார்கள்.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் பருவமழை இல்லாத காலத்தில் நிரந்தரமாக நகரங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த முக்கிய ஆறுகளின் குறுக்கே ரூ.1,000 கோடியில் பல்வேறு திட்டங்களின் கீழ் 75 தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கி உள்ளது.
இந்தத் திட்டத்தில், முதற்கட்டமாக மதுரை வைகை ஆற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டப்பட்டது. முதல் தடுப்பணை மதுரை வைகை ஆற்றில் ஏவி மேம்பாலம் அருகே மேல் பகுதியில் ரூ.10 கோடியே 48 லட்சத்திலும், மற்றொரு தடுப்பணை வைகை ஆற்றில் ஒபுளா படித்துறையின் கீழ் பகுதியில் ரூ.9 கோடியே 80 லட்சத்திலும் கட்டப்பட்டது.
இந்த தடுப்பணைகளில் குறைந்தப்பட்சம் 50 மில்லியன் கன அடி முதல் 300 மில்லியன் கன அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை இந்த தடுப்பணைகளில் தண்ணீரை தேக்க பொதுப்பணித்தறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
வைகை ஆற்றின் குறுக்கே கட்டிய இந்த தடுப்பணைகளில் தண்ணீரை தேக்கினால் நகர்ப் பகுதியில் 3 கிமீ., தூரம் தண்ணீரை நிரந்தரமாக தேக்கி நகரின் நிலத்தடிநீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், வைகை அணை கட்டியதின் நோக்கமே ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் வழங்கவே என்பதாகவும், இடையில் மதுரையில் தடுப்பணை கட்டி அதில் தண்ணீரை தேக்கினால் அது சட்டவிரோதமாகிவிடும் என்பதால் தற்போது தண்ணீரை தேக்க பொதுப்பணித்துறை தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
அதனால், ஆற்றில் பெரும் வெள்ளம் வரும்போது தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்ற எண்ணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், எந்த நோக்கத்திற்காக இது தேக்கப்பட்டதோ அது நிறைவேறாமல் தடுப்பணைகளால் மதுரையின் நிலத்தடிநீர் ஆதாரம் உயரவில்லை. மாறாக இயல்பாக மழை பெய்து, நகரின் நிலத்தடி நீர் ஆதாரம் உயர்ந்தது.
தடுப்பணைகளில் கழிவு நீர் தேங்கி நகரின் சுகாதாரம் பாதிக்கப்பட்டதே இந்த திட்டத்தால் மதுரைக்கு கிடைத்த பலனாக உள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘வைகை ஆற்றின் கரையோரம் தடுப்பு சுவர் கட்டுவதால் தடுப்பணையில் தண்ணீர் தேங்கினால் சுவருக்கு பாதிப்பு வரும் என்பதால் ஷட்டர் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது, ’’ என்றார்.
தமிழ்நாடு நவீன வழிச்சாலை திட்டப்பொறியாளர் ஏ.சி.காமராஜ் கூறுகையில், ‘‘தடுப்பணைகள் கட்டினால் குறைந்த அளவு தண்ணீரையே நம்மால் தேக்க முடியும். மேலும் தடுப்பணைகள் என்பது தற்காலிகத் தீர்வாகவே மட்டுமே இருக்கும். நவீன நீர்வழிச்சாலை திட்டம் மூலம் தேக்கும் நீரில் கால் பங்கு நீரைக் கூட தேக்க முடியாது. தடுப்பணைகளால் சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கு தண்ணீர் கொடுக்கவும், நிலத்தடிநீர் ஆதாரத்தையும் பெருக்க முடியாது.
ஏனென்றால், எந்த ஆற்றிலும் வெள்ளம் வரும் பொழுது மட்டுமே ஏராளமான தண்ணீர் வரும். உதாரணமாக கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் 3 மாதத்தில் மட்டும் சுமார் 180 டி.எம்.சி தண்ணீர் கடலுக்குசென்றுள்ளது. இவ்வளவு நீரையும் தடுப்பணைகள் மூலம் தேக்க முடியாது.
மேலும், ஏற்கெனவே கட்டப்பட்ட பல்வேறு தடுப்பணைகள் பெரும்பாலும் வறண்டே காணப்படுகிறது.
ஆற்றில் தண்ணீர் வந்தால் தான் தடுப்பணைக்கு பலன் கிடைக்கும். நவீன நீர்வழிச்சாலை திட்டம் மட்டுமே எந்த ஆற்றில் வெள்ளம் வந்தாலும் அதனைத் தேக்கி வறண்ட ஆற்றுக்கு திருப்பிவிடுகிறது.
இதன் மூலம் அனைத்து ஆறுகளும் ஆண்டு முழுவதும் நீரோட்டத்துடன் ஜீவ நதிகளாக மாறும். தமிழக அரசு தடுப்பணைகளுக்கு போல், இந்த திட்டத்திற்கு ரூ.1000 கோடி செலவு செய்ய வேண்டியதில்லை. நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்திற்கு ரூ.500 கோடி தேவையில்லை.
ஏனென்றால், திட்டத்தை ஆய்வு செய்து அனுப்பினால் மத்திய அரசு தேசிய திட்டமாக அறிவித்து 90 சதவீதம் நிதியை மானியமாக வழங்கத் தயாராக உள்ளது. மேலும் இத்திட்டத்தில் மின்சாரம் கிடைக்கும் என்பதால் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்வார்கள். எனவே மாநில அரசு இத்திட்டத்தினை " ஜீரோ பட்ஜெட்டில்" நிறைவேற்றிவிட முடியும், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT