Published : 05 Dec 2019 11:19 AM
Last Updated : 05 Dec 2019 11:19 AM
மழைக்காலங்களில் குடியிருப்புகளைச் சுற்றி பல நாட்களாக வடியாமல் தேங்கி நிற்கும் தண்ணீரால் தூத்துக்குடி மக்கள் அவதிப்படுவது நீடிக்கிறது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இந்த பிரச்சினைக்கு தற்காலிகமாக மட்டுமே தீர்வு காணப்படுகிறது.
கடற்கரையோரம் அமைந்திருப்பதாலும், மாநகரின் சில பகுதிகள் பூகோள ரீதியாக கடல் மட்டத்தைவிட சற்று தாழ்வாக இருப்பதாலும் தூத்துக்குடி மாநகரத்தில் இருந்து மழைநீர் வழிந்தோடுவதில் சிரமம் உள்ளது. இதனால், சிறு அளவு மழை பெய்தாலே குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஊற்றெடுக்கத் தொடங்கிவிடும். இதனால், நகரில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவது என்பது பெரும் சவாலாக உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு தூத்துக்குடியில் மிக கனமழை பெய்தது. காட்டாற்று வெள்ளமும் நகருக்குள் புகுந்தது. மாநகரம் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது. இந்த தண்ணீரை வெளியேற்ற 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
நீரை வெளியேற்ற போராட்டம்
அதற்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக பெரிய அளவில் மழை இல்லை. தெருக்களில் தண்ணீர் தேங்கிய போதிலும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. தற்போது, கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. கடந்த இரு தினங்களாக மழை குறைந்தாலும் மழை நீர் வடியாமல் அப்படியே நிற்கிறது.
மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் 50-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணிகள் நடைபெறுகின்றன. தற்காலிக வாய்க்கால்கள் அமைத்தும், சாலைகளை தோண்டியும், டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீரை வெளியேற்றும் பணி 24 மணி நேரமும் நடைபெறுகிறது. இருப்பினும் பல இடங்களில் மழைநீர் பெருமளவில் தேங்கி நிற்கிறது.
திட்டப்பணிகள் தாமதம்
கடந்த 2015-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து, மாநகராட்சி பகுதியில் பெருமழை காலத்தில் வெள்ளநீரை வெளியேற்ற ரூ. 937 கோடியில் மழைநீர் வடிகால் திட்டம் தயாரிக்கப்பட்டது. மூன்று கட்டங்களாக இந்த திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக ரூ. 96.12 கோடியில் 6 பணிகள் தொடங்கப்பட்டன.
இதில், நகருக்கு வெளியே இருந்து நகருக்குள் வரும் காட்டாற்று வெள்ளத்தை தடுத்து கால்வாய்கள் அமைத்து கடலுக்கு திருப்பி விடும் பணி முக்கியமானதாகும். மேலும், நகருக்குள் வரும் தண்ணீரை சேமித்து வைக்க சி.வ.குளத்தை ரூ.11.50 கோடியில் தூர்வாரி சீரமைத்தல் பணியும் இதில் அடங்கும். இபணிகளை இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் முடிவடையவில்லை.
தூத்துக்குடி மாநகரில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் இன்னும் முடிவடையவில்லை. வடிகால்களை முறையாக தூர்வார வில்லை என்ற குற்றச்சாட்டையும் மக்கள் முன்வைக்கின்றனர்.
ஆட்சியர் விளக்கம்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது: தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் திட்டம் முடிவடைய இன்னும் 3 மாதங்கள் ஆகும். பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இவ்விரு திட்டங்களையும் 100 சதவீதம் முடித்தால் மழைநீரை வெளியேற்ற வசதியாக இருக்கும்.
தற்போது மழைநீரை வெளியேற்றுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. மழைக்காலத்துக்குப் பின் வடிகால் திட்டப்பணிகள் விரைவாக முடிக்கப்படும், என்றார் ஆட்சியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT