Last Updated : 05 Dec, 2019 10:52 AM

1  

Published : 05 Dec 2019 10:52 AM
Last Updated : 05 Dec 2019 10:52 AM

ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர்;  7 ரூபாய்க்கு 20 லிட்டர்: கோவைக்கு வந்தாச்சு தானியங்கி குடிநீர் விற்பனை நிலையம்

உக்கடம் பேருந்து நிலையத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையம் | படங்கள்: ஜெ.மனோகரன்

குடிநீருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், வணிக ரீதியிலான அதன் விற்பனையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில்நிலையங்களில் ரயில்வே சார்பில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.15-க்கும், பேருந்து நிலையங்களில் தமிழக அரசு சார்பில் ‘அம்மா குடிநீர்’ பாட்டில் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இதைவிட குறைந்த விலையில் பொது மக்களுக்கு குடிநீரை விநியோகிக்க, கோவையில் முதல்முறையாக உக்கடம் பேருந்து நிலையத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம், ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவி குழு மூலம் இந்த குடிநீர் நிலையத்தை கோவை மாநகராட்சி நிர்வகிக்க உள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட ‘தாரணா’ என்ற நிறுவனம் பரா மரித்து, குடிநீரை விநியோகம் செய்ய உள்ளது. இந்த நிறுவனம் கேரளாவில் இதேபோன்று தானியங்கி குடிநீர் நிலையங்களை நிறுவி, குடிநீரை விநியோகம் செய்து வருகிறது.

கோவையில் முதல்முறையாக செயல்படுத்தப்பட உள்ள இந்த புதிய திட்டம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “ஒரு ரூபாய் நாணயத்தை குடிநீர் வழங்கும் இயந்திரத்தில் செலுத் தினால் பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் குடிநீர் கிடைக்கும்.அதுமட்டுமின்றி, 7 ரூபாய்க்கு 20 லிட்டர் கேனில் தண்ணீர் வழங்கும் திட்டமும் உள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்த, பொது மக்கள் அதற்கான ஸ்மார்ட் கார்டை வைத்திருக்க வேண்டும்.

இந்த ஸ்மார்ட் கார்டை தானியங்கி இயந்திரத்தில் காட்டினால், 20 லிட்டர் குடிநீர் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டை ‘பே-டிஎம்’, ‘கூகுள் பே’, இணைய வங்கி சேவை மூலமாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஸ்மார்ட் கார்டு மூலம் தானியங்கி நிலையத்தில் தண்ணீர் பெறும்போது அதற்கேற்றவாறு கணக்கி லிருந்து தொகை கழித்துக்கொள்ளப் படும். செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதை போன்று இந்த ஸ்மார்ட் கார்டை மீண்டும், மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். கார்டுக்கென தனி கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

வீடுகளுக்கு நேரடி விநியோகம்

வணிக நிறுவனங்கள், வீடுகளில் 20 லிட்டர் குடிநீர் கேனை ரூ.40 முதல் ரூ.70 வரை செலுத்தி வாங்குகின்றனர். அவர்கள் நேரடியாக குடிநீர் நிலையத்தில் 20 லிட்டர் குடிநீரை பெற்றுக்கொண்டால் ரூ.7 மட்டுமே செலவாகும். வீடுகள், வணிக நிறுவனங்கள், விசேஷங்களுக்கு கேன்களை வாகனம் மூலம் கொண்டு சென்று விநியோகிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. இவ்வாறு 20 லிட்டரை குடிநீர் கேனை பெற்றுக்கொண்டால் ரூ.20 கட்டணமாக பெறப்படும். இந்தத் திட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த 5 பேர், குடிநீர் நிலைய ஆபரேட்டர், உதவியாளர், கேன்களை விநியோகிக்கும் வாகன ஓட்டு நர், உதவியாளர் என மொத்தம் 10 பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

மேலும் 130 இடங்களில்…

மகளிர் சுயஉதவி குழுவினர் கடன் பெற்று குடிநீர் நிலையத்தை நிறுவி யுள்ளனர். எனவே, 20 ரூபாய்க்கு குடிநீரை விற்பனை செய்தால் அதில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.12, மாநகராட்சிக்கு ரூ.2, குடிநீர் சுத்திகரிப்பு பராமரிப்பு நிறுவனத்துக்கு ரூ.6 என வருவாய் பகிர்ந்து அளிக்கப்படும். 24 மணிநேரமும் இந்த குடிநீர் நிலையம் செயல்படும்.

குடிநீர் நிலையத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 1,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்க முடியும். கோவையில் உக்கடம் பேருந்து நிலையத்தில் முதல்முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று, மேலும் 130 இடங்களில் படிப்படியாக தானியங்கி குடிநீர் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x