Last Updated : 04 Dec, 2019 08:20 PM

9  

Published : 04 Dec 2019 08:20 PM
Last Updated : 04 Dec 2019 08:20 PM

17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும் குரல்கள்...

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய 2 வயது சிறுவன் சுஜித்திற்காக திருச்சி நடுக்காட்டுப்பட்டி அலறிய அலறலே இன்னமும் அடங்கவில்லை. அதற்குள் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நடூரில் பெருஞ்சுவர் ஒன்று சரிந்து 17 உயிர்களைப் பறித்திருக்கிறது. இந்த ஓலத்திற்குள்,‘பலி கொண்டது தீண்டாமைச்சுவர்!’ என்ற சர்ச்சை கிளம்பி, ‘அன்று சுஜித்திற்கு ஒரு நீதி; இன்று செத்த 17 உயிர்களுக்கு வேறொரு நீதியா?’ என்றொரு போராட்டமும் கிளம்பி, பலர் தடியடிபட்டு சிறையில் அடைக்கப்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரிலேயே ஆறுதல் சொல்ல முதல்வரே வரவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அப்படி இதில் என்னதான் நடந்தது? நேரடியாகக் களம் இறங்கினேன்.

மேடும் பள்ளமும் நிறைந்த மேட்டுப்பாளையம் நகரின் நடுமையம் நடூர். இந்த ஊருக்கு நடுமையத்தில் காணப்படுவது ஏ.டி.காலனி என்கிற கண்ணப்பன் லே-அவுட். சுவர் விழுந்து இடிபாடுகள் அகற்றப்பட்ட இடத்தில் நடக்கிறேன். ‘காலடிக்குக் கீழேதான் 17 பேர் மூச்சுமுட்ட உயிரோடு சமாதியாகியிருக்கிறார்கள்!’ நினைக்கும்போதே நெஞ்சில் ஏறும் பாரம். நொறுங்கிக் கிடக்கும் உருக்குலைந்த இரும்பு பீரோ, பிளாஸ்டிக், அலுமினியப் பொருட்கள். பீரோவின் ஒரு கதவில் சிரிக்கும் விஜய், அஜித், மழலை புகைப்பட ஸ்டிக்கர்கள்.

‘‘என் வம்சத்தையே அழிச்சுப்புட்டீங்களே சாமி... நீங்க நல்லாயிருப்பீங்களா? உங்க ஊட்டு சுவரு எங்கூட்டு மேல வுழுந்து தொலைச்சா நாங்க என்னத்துக்காவோம்னு எத்தினி விசுக்கா நடந்திருப்போம். நாயை வுட்டு கடிக்க விட்டீங்களே சாமீ. என் வூட்ல மட்டும் ஏழு உசுரு போயிருச்சே. இப்ப பதில் சொல்லுங்க சாமீ!’’ ஓங்கி வெடிக்கும் ஓலம் ஒன்று கேட்கிறது.

அவர் பெயர் கமலம்மாள் (வயது 60). கணவன் இல்லை. பண்ணாரி, ஆனந்தன் என்று இரண்டு மகன்கள். பண்ணாரி இறந்து விட்டார். பண்ணாரியின் மனைவி அருக்காணி (47 வயது), அவர் மகள்கள் ஹரிசுதா (17), மகாலட்சுமி(10) ஒரு வீட்டிலும், ஆனந்தன்(38), அவர் மனைவி நதியா(35), மகன் லோகுராம்(10), மகள் அட்சயா(9) மற்றொரு வீட்டிலும் வசித்து வந்துள்ளனர். இந்த இரண்டு வீட்டிலும் மாறி, மாறி வசித்துள்ளார் கமலம்மாள்.

பத்து நாட்கள் முன் கண்பார்வையற்ற தன் தங்கை வீட்டிற்கு குன்னத்தூர் சென்றுள்ளார். திரும்ப திங்கட்கிழமை திரும்ப வர ஏற்பாடு. அந்தநாள் காலையில்தான் போன். ‘அம்மா நம்ம வீடு மொத்தமா உழுந்துடுச்சு. ஒருத்தரு கூட உசுரோட இல்லை!’’என்று.

‘‘பாட்டி நாளைக்கு வந்துடுவீல்ல. நாங்க பள்ளிக்கூடம் போயிட்டு வரும்போது ஊட்ல இருக்கோணும்’ன்னு நேத்து ராத்திரியே என் பேத்திக போன்ல அழுதுது. நான் வர்றதுக்குள்ளே அத்தனையும் போச்சே. அதுகளோட ஒடம்பை நான் வந்து பார்க்கிறதுக்குள்ளே தூக்கிட்டுப் போயிட்டாங்களே சாமி!’’அங்கு குவிந்திருந்த துணிகளில் சிறுமி கவுன் ஒன்றை எடுத்து வைத்து மறுபடி ஒப்பாரி வைக்கிறார். அவரை ஆசுவாசப்படுத்தி அவரிடம் விழுந்த சுவர் பற்றி விசாரித்தேன்.

‘‘எங்க வூடு கட்டி முப்பது வருஷமாச்சு சாமி. அப்புறம்தான் அவங்க பெரிய சுவர் வச்சாங்க. சுவர் வைக்கும்போதே‘அது போட்டு அமுத்தினா நாங்க என்னத்துக்காவோம்?’ன்னு அவங்ககிட்ட கெஞ்சினோம். அவங்க கேட்கலை. அப்புறமும் எத்தினியோ தடவை சொல்லியிருக்கோம். அவங்க ஊட்டு சாக்கடை எல்லாம் எங்க வூட்டு மேலதான் விழும். அதனால எங்க வூடு அப்பப்ப இடிஞ்சிடும். கட்டுவோம். இப்ப, இந்த சுவரு எங்குடும்பத்தை அழிக்கிறதுக்குன்னே இருந்திருக்கு பாருங்க சாமி!’’ தொடர்ந்து வெடிக்கிறார். அவரை நாலைந்து பெண்கள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர்.

நசுங்கிய வீடுகளை ஒட்டியிருந்த வீட்டுப் பெண்மணி ஒருவரிடம் பேசினேன். ‘‘காலையில நாலுமணி. மாடு பால் கறக்க எங்க வூட்டுக்காரர் எந்திரிச்சாரு. கட்டுத்தறி லைட் போட்டவர், ‘நம்ம வூட்டு முன்னாடி ஒண்ணுமே காணோம்!’னு பதறிட்டு ஓடி வர்றார். நிதானிச்சு பார்த்ததுலதான் அந்த பெரிய சுவர் உழுந்துடுச்சுன்னே தெரிஞ்சுது. அப்புறம்தான் எல்லோரையும் எழுப்பி, போலீஸ் ஃபயர் சர்வீஸ்னு போன் பண்ணினோம், அவங்க வர்றதுக்கு அஞ்சரை மணி ஆயிருச்சு!’’ என்றார்.

அடுத்த சந்தில் கோழிக்கூடு மாதிரி ஒரு குட்டி வீடு. அங்கே மணி என்ற பெண்ணின் ஓலம். ‘‘செத்ததுல மங்கம்மா என் தங்கச்சி சாமி. கூலி நாழி போயிட்டு இங்கதான் சோறாக்கி உண்டுட்டு இருப்பா. ராத்திரிக்கு தனியா படுக்கறதுக்கு சங்கடப்பட்டுட்டு சிவகாமி வூட்டுக்குப் போவா. ‘அவ ஊட்ல படுக்காதே. அந்தப் பக்கம் சுவர் இடிஞ்சு விழுகறாப்பல இருக்குன்னு நான் ஊர்லயிருந்து வரும்போதெல்லாம் சொல்லியிருக்கேன். ‘அவங்களுக்கு ஆகறது நம்மளுக்கும் ஆயிட்டுப் போகுது போ!’ன்னு போவா. இப்ப சிவகாமி குடும்பத்தோட இவளும் போயிட்டா!’’மறுபடி வெடிக்கிறது குரல்.

வீட்டுக்கு வீடு ஒப்பாரிக் குரல்கள்தான். பெட்டி, பெட்டியாய் குட்டி, குட்டி வீடுகள். குழிக்குள் பல, மேடுகளில் சில. இதற்கெல்லாம் மேலே 15 அடி மேட்டில்தான் பெருந்தனக்காரர்கள் வீடுகள். அந்த மேட்டின் முனையில்தான் பெருந்தனக்காரரர்களின் 20 அடி பெருஞ்சுவர்கள். அந்த பெருந்தனக் காரர்களில் ஒருவர் கட்டிய 3 அடி தடிமன் உள்ள கருங்கற்சுவர்தான் இடிந்து விழுந்து 17 உயிர்களைக் கொன்றது.

இந்தச் சுவரை ஒட்டி இணைப்பாக இன்னொரு பெருந்தனக்காரரின் பெரிய சுற்றுச் சுவர் ஹாலோ பிளாக்கில் 50 மீட்டர் நிளத்திற்கு நீளுகிறது. அந்தச் சுவரைக் கட்டியவர் பள்ளிக்கூடமும், பாக்கு காய வைக்கும் களமும் அமைத்திருக்கிறார். காலனிவாசிகளின் வீடுகள் முக்கால் சென்ட், ஒரு சென்ட், ஒன்றரை சென்ட்டில் என்றால் இந்த பெருந்தனக்காரர்கள் ஏக்கர் கணக்கில் காலி இடம் விட்டு பெரிய, பெரிய பங்களாக்கள் எழுப்பி இருக்கின்றனர். பெருந்தனக்காரர்கள் வீடுகளுக்கான வாசல் மேற்குப் பக்கம், கழிவு நீர் விடும் இடமாக கிழக்குப் பக்கம், அதாவது அவர்கள் காலனிக்கு வழங்கும் பரிசு சாக்கடைகள், செப்டிக் டேங்க் கழிவுகள். அதையொட்டி குட்டி, குட்டி வீடுகள் கட்டி குடியிருப்பவர்களிடமும் நீளும் திகில்.

‘‘இதுவும் எப்ப விழும்னு தெரியலை சாமி. அதனால என் புள்ளை, நானு, மகள், பேத்தி நாலு பேருமே இங்கே படுக்கறதில்லை. சொந்தக்காரங்க வூட்டுக்குப் போயிடறோம்!’’ என்று சொல்லி லட்சுமி என்பவர் தன் வீட்டிற்குள்ளே என்னை அழைத்துப் போய் காட்டினார். அங்கே சுவர் முழுக்க நீர்க்கசிவு. இதுபோலவே நீர்க்கசிவுடன் அந்த வரிசையில் நிறைய வீடுகள். அதில் கண்ணையனின் வீடும் ஒன்று. அவர் இந்த காலனி உருவான விதத்தை விவரித்தார்.

‘‘ இது கந்தசாமிங்கிறவர் எங்க சனங்களுக்கு (அருந்ததியர்) 40 வருஷத்துக்கு முந்தி கொடுத்த பூமி. 1991-ல் பட்டா ஆச்சு. 2009-ல் மானியத்துல வீடு கட்டித் தந்தாங்க. அது கொஞ்ச நாள் கூட தாங்கலை. அதனால இப்ப சிலபேரு பசுமை வீடுகள் திட்டத்துல வீடு கட்டினோம். அதையும் கான்ட்ராக்ட் எடுத்தவன் அரைகுறையா விட்டுட்டு ஓடிட்டான். மீதிய சிமெண்ட் சீட்டு, ஆஸ்பெஸ்டாஸ், ஓடுன்னு போட்டு அவங்கவங்க சக்திக்கு தகுந்தாப்பல செஞ்சு இருந்துட்டு வர்றோம். சுவர் அமுத்தின வூட்ல ஒண்ணு (ஆனந்தன் வீடு) கூட பசுமை வீடு திட்டத்துல கட்டி பாதியில நின்னதுதான். அதை சிமெண்ட் சீட்டு போட்டுத்தான் குடியிருந்துட்டு வந்தாங்க...!’’ என்றார் கண்ணையன்.

கண்ணையன் வீடும் பசுமை வீடு திட்டத்தில் அரைகுறையாய் கட்டப்பட்டுள்ளது. அதையொட்டியே ஹாலோ பிளாக்கிலான பெரிய சுற்றுச்சுவர் நீளுகிறது. அதன்நீர்க்கசிவும் கண்ணையன் வீட்டிற்குள்தான் பாய்கிறது. ‘‘இதுலதான் நான், என் மகள், பேரன்னு மூணு பேர் இருக்கோம். இந்த சுவரும் விழுந்தா நாங்களும் சாகவேண்டியதுதான்!’’ என்கிறார் விரக்தி ததும்ப.

கமலம்மாளின் கதறல், கண்ணையனின் விரக்தி இங்கே குடியிருக்கும் அத்தனை பேரிடமும் உள்ளது. இந்த நிலையில்தான், ‘இறந்தவர் வாரிசுகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை’என அறிவித்தது அரசு.

இதில் சில தலித் அமைப்புகள், ‘சுஜித்திற்கு ஒரு நீதி, இந்த 17 உயிர்களுக்கு அநீதியா?’ எனப் பொங்கின. ‘‘கட்டப்பட்டது சாதாரண சுவர் அல்ல, தீண்டாமைச்சுவர். தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்படி சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வேண்டும். இறந்தவர்களுக்கு ரூ. 25 லட்சம், வாரிசுக்கு அரசு வேலை!’ என மறியல் செய்தனர். தடியடிபட்டு சிறை சென்றனர்.

அந்தப் பதற்றத்தைத் தணிக்கவே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட முதல்வர் ‘‘இது தீண்டாமைச்சுவரா இல்லையா என்பது விசாரணையில் தெரிய வரும்!’’ எனச் சொல்லியுள்ளார். அவர் வந்த வேகத்தில் சுவர் எழுப்பிய பெருந்தனக்காரர் சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.

ஆனால், எந்த இடத்திலும் எஞ்சி இருக்கும் பெருஞ்சுவர்களை அகற்றுவது குறித்தும், இங்கு வசிக்கும் எளிய மக்களுக்கான பாதுகாப்பு வீடுகள் குறித்தும் அரசு வாக்குறுதி ஏதும் தராததுதான் வருத்த வடுவாய் வலிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x