Published : 04 Dec 2019 02:30 PM
Last Updated : 04 Dec 2019 02:30 PM
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் ஆணையர் நியமிக்கப்பட்டு நான்கு மாதங்களாகியும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. தமிழகத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில் புதுச்சேரியில் எப்போது உள்ளாட்சித் தேர்தல் என்ற கேள்வி அனைத்து மட்டத்திலும் எழுந்துள்ளது.
புதுச்சேரியில் இதுவரை இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2006-ல் கடைசியாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
உச்ச நீதிமன்றம் கடந்த 8.5.2018 இல் புதுச்சேரியில் வார்டுகளை 4 வார காலத்துக்குள் சீரமைத்து, 8 வார காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வார்டுகளை மறுசீரமைத்து அரசாணையை புதுச்சேரி அரசு வெளியிட்டது. அதன்படி உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம், ஓபிசி பிரிவினருக்கு 33.5 சதவீதம், எஸ்சி இடஒதுக்கீடு உள்ளாட்சி மக்கள் விகித அடிப்படையில் நியமிக்கப்படும். எஸ்டி பிரிவினருக்கு 0.5 சதவீதம்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் புதுச்சேரியில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. குறிப்பாக ஆளுநர் கிரண்பேடியும் அதிக அளவில் ஆர்வம் காட்டினார். உள்ளாட்சித் தேர்தல் மூலம் 1,147 பிரதிநிதிகள் மக்கள் சேவைக்காக தேர்வு செய்யப்படுவதுடன் கூடுதல் நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும். அத்துடன் மக்களின் பல அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆளுநர் கிரண்பேடி தரப்பில் கடந்த ஜூலையில் உள்ளாட்சித் தேர்தல் ஆணையரை நியமிக்க தனி உத்தரவைப் பிறப்பித்ததால் அதை ரத்து செய்து சட்டப்பேரவையைக் கூட்டி புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணனை முதல்வர் நாராயணசாமி நியமித்தார். சட்டப்பேரவையில் ஆணையரை அறிவித்து நான்கு மாதங்களாகியும் அதைத் தொடர்ந்து அடுத்தகட்டப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சூழலில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் விறுவிறுப்பு அடைந்து தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இதற்கான அடிப்படைப் பணிகளே நடைபெறவில்லை.
இதுதொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, "உள்ளாட்சித் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் கிரண்பேடி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு எந்த விளக்கமும் கேட்கவில்லை.
அதே நேரத்தில் ஆளுநரின் புகாரால் ஆணையரை நியமித்தாலும் அங்கு பணிக்கு அலுவலர்களை நியமிக்க இயலவில்லை. அதுவும் தாமதத்துக்கு ஓர் காரணம்.
முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்கள் தனி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வார்டு மற்றும் தொகுதிகளை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொகுதி மறுசீரமைப்பு 3 அல்லது 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு முடிந்தவுடன் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT