Published : 04 Dec 2019 11:08 AM
Last Updated : 04 Dec 2019 11:08 AM
உசிலம்பட்டி பகுதிக்கான 58 கிராம பாசன கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் திறந்துவிட அரசாணை வெளியிடக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள முற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை வட்டங்களில் உள்ள 33 கண்மாய்கள் பாசனம் பெறும் வகையில் 58 கிராம கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது.
தேனி மாவட்டம் வைகை அணையில் தென்மேற்குப் பகுதியில் இருந்து உபரிநீராக வெளியேறும் தண்ணீரைச் சேமித்து ஆண்டிப்பட்டி, வத்தலகுண்டு, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராமங்களுக்கு கொண்டு செல்வதற்காக இத்திட்டம் 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
18 ஆண்டுகளாக இந்தத் திட்டம் நிறைவு பெறாமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இந்த திட்டம் முழுமை பெற்றது. தொடர்ந்து, வைகை அணையில் இருந்து இந்தக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
ஆனால், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட உசிலம்பட்டி பகுதிக்கான 58 கிராம கால்வாய் திட்டம் முழுமையான பயனை அளிக்காத நிலையில் உள்ளது.
இந்நிலையில், வைகை அணையின் நீர் மட்டம் அதிகமாக உள்ளதால், இந்த திட்டத்தின் கீழ் கால்வாய்களில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பலகட்ட போராட்டங்களுக்கும் பலன் இல்லாத நிலையில், தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தி விவசாய சங்கம் சார்பில் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கான அனுமதி மறுக்கப்பட்டதோடு விவசாயிகளைப் போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையில், பாசனத்திற்காக தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக விவசாயிகளிடம் அரசு தரப்பு விளக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT