Published : 03 Dec 2019 12:51 PM
Last Updated : 03 Dec 2019 12:51 PM
மேட்டுப்பாளையம் காவல்துறை பாதிக்கப்பட்டவர்களையே கைது செய்திருப்பதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (டிச.3) வெளியிட்ட அறிக்கையில், "மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியை ஒட்டி, சக்கரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவரது பங்களா உள்ளது. அவர், பங்களாவை ஒட்டி ஒரு புறமாக மட்டும் 80 அடி நீளத்தில் 10 அடிக்கும் அதிகமான உயரத்தில் தடுப்புச் சுவர் கட்டியுள்ளார். அந்தச் சுவரை ஒட்டிய தாழ்வான பகுதியில் நான்கு வீடுகள் இருந்தன. தடுப்பு சுவர் அந்த வீடுகள் மேல் எந்த நேரமும் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதை அந்த 4 வீட்டாரும் சிவசுப்பிரமணியனிடமும் மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகளிடமும் புகார் கூறிவந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
இப்போது மழை நேரமாதலால் தண்ணீர் தேங்கி மண் அரிப்பு ஏற்பட்டால் சுவர் அந்த 4 வீடுகளின் மேல் விழுந்துவிடும் என்பதை எடுத்துச் சொல்லியும் அதை சிவசுப்பிரமணியனும், நகராட்சியும் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் மழை பெய்து தண்ணீர் தேங்கி மண் அரிப்பு ஏற்பட்டதால் அந்தச் சுவர் இடிந்து விழுந்து அந்த 4 வீடுகளையும் தரைமட்டமாக்கியது. வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் துயர நிகழ்வால் அந்தப் பகுதியே சோகமயமானது. உடனடியாக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். 17 பேரின் உடல்களும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இறந்தவர்களின் உறவினர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு வந்தனர். சிவசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் ஊட்டி - மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்றனர். தமிழ்ப்புலிகள் கட்சியினரும் அதன் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டத்தைக் கலைக்க போலீஸார் தீவிரமாக தடியடி நடத்தினர். நாகை திருவள்ளுவனை மிருகத்தனமாக, படுபயங்கரமாகத் தாக்கி தரதரவென இழுத்துச் சென்ற போலீஸார் அவரோடு ஏராளமானோரை கைது செய்து காவல் துறை வாகனத்திற்குள் திணித்துக் கொண்டுபோயினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிவசுப்பிரமணியன் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார்.
அதேநேரம் நாகை திருவள்ளுவன் மீது போலீஸார் என்ற போர்வையில் சமூக விரோதிகள் தாக்கினர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எப்படியிருப்பினும், அவர் மீதான தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்ததோடு அந்த இடத்தைப் பார்வையிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். இந்த நிவாரணத் தொகை போதாது; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் வழங்க வேண்டும்.
அதோடு, சுவருக்கு உரிமையாளரை விட்டுவிட்டு, தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் பாதிக்கப்பட்டவர்களையே கைது செய்த மேட்டுப்பாளையம் காவல் துறையின் காட்டு தர்பாரை வன்மையாகக் கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க நீதி வழங்க வேண்டும்" என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT