Published : 03 Dec 2019 10:26 AM
Last Updated : 03 Dec 2019 10:26 AM
மதுரை
கிராமப்புறங்களில் தேர்தல் அறிவித்துள்ளதால் முதலில் அங்கு வெற்றிபெற்ற பிறகு நகர்ப்புற தேர்தலில் முழு பலத்தை பிரயோகித்து வெற்றிபெற அதிமுக திட்டமிட்டுள்ளதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 2016-ல் நடக்கவேண்டிய தமிழக உள்ளாட்சித் தேர்தல், பல் வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதம் ஆனது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற உற்சாகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக வினர் தயாராயினர்.
கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து திமுக, தேமுதிக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றன.
அதிமுகவினர் கிராமப்புறங் களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கி உள்ளனர். அனைத்து கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டங்களை தொடங்கிய பிறகு, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு பொங்கல் பரிசு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இந் நிலையில் முதல் கட்டமாக ஊராட்சி வார்டுகள், ஒன்றியத் தலைவர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச., 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடக்கும். ஜன.2-ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சில நிர்வாக காரணங்களால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தலைச் சந்திக்க தயாராகி விட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே புதிதாகத் தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களில் உள்ளாட்சிப் பதவிகளுக்கு முறை யான வரையறையைக் காரணம் காட்டி, திமுக நீதிமன்றத்தை அணுகி உள்ளதால் தேர்தலை சந்திக்கத் தயாராக இல்லையோ என்ற சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து காங்கிரஸ் மாநில நிர்வாகி சையதுபாபு கூறியதாவது: அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவ வரையறை செய்த பிறகே, முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங் கிய, ஆளுங்கட்சி புதிய மாவட்டங் களையும் தொடங்கி வைக்கிறது.
புதிய மாவட்டங்களில், உள்ளாட்சிப் பதவிகளுக்கான வரையறைகளை அதிகாரிகள் தெளிவுப்படுத்தவில்லை. கிராமப் புறங்களில் பொங்கல் பரிசுத் திட்டம் போன்ற சில சலுகைகளால் தங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும் எனவும், அதன்மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று அதன்பிறகு நகர்புறங்களில் தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவினர் திட்டமிடுகின்றனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளை பிடிக்க, ஆளும்கட்சி முழு அதிகாரத்தையும் பயன் படுத்தத் திட்டமிடுகிறது.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அதிகாரிகள் மூலம் எளிதில் வெற்றியைத் தக்க வைக்கலாம் என நம்புகின்றனர். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் கடந்த 3 ஆண்டுகளாக கிராமங்களில் அடிப்படை வசதிகளில் கூட பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எப்போது தேர்தல் நடந்தாலும் அதை சந்திக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கிறோம். இதை திசை திருப்பவே கிராமப்புறங் களுக்கு தேர்தல் தேதியை அறிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT