Published : 03 Dec 2019 10:10 AM
Last Updated : 03 Dec 2019 10:10 AM
மதுரை
மாநகராட்சி மேயர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவதால் குதிரைப் பேரத்துக்கு பயந்தும், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால் கட்சியில் கவுரவமும் பறிபோகும் என்பதாலும் ஆளும்கட்சி முக்கிய நிர்வாகிகள் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட தயங்குவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஊரக, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டிச. 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குவதாவும், வாக்குப்பதிவு முடிந்து ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. எந்தெந்த மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளை ஆண் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வது என முடிவாகாததால், தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றும், ஓரிரு நாளில் அதற்கான தேர்தல் தேதியும் அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மதுரை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மேயர் வேட்பாளர் ‘சீட்’ பெற ஆளும்கட்சியில் பெரும் போட்டியே ஏற்பட்டது.
குறிப்பாக அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோரது குடும்ப உறுப்பினர்களும், மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளும் போட்டியிட பெரிதும் ஆர்வம் காட்டினர். ஆனால், கவுன்சிலர்கள் வெற்றிபெற்றபின் மறைமுக தேர்தல் மூலம் மேயர் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு ஆளும்கட்சியில் மேயர் பதவிக்கு போட்டி குறைந்துள்ளது.
இதுகுறித்து ஆளும்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: நேரடி தேர்தல் மூலம் மேயர் தேர்வு செய்யப்படும் சூழலில், சீட் பெற்று போட்டியிட்டால் தேர்தல் செலவுக்கு கட்சி மேலிடம் பெரும் தொகை வழங்கும். ஏனென்றால் மேயர் தேர்தல் வெற்றி கட்சிக்கு முக்கியம். அதனால், போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டியது கட்சித் தலைமையின் பொறுப்பாகி விடும். ஆனால், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் வெற்றி பெற்று மேயர் பதவிக்கு ‘சீட்’ கேட்கும்போது, மறைமுகத் தேர்தலில் சொந்த கட்சி கவுன்சிலர்களின் ஆதரவைப் பெறவே பெரும் தொகை கொடுக்க வேண்டி வரும்.
இந்த குதிரைப் பேரத்தில் ஒரு கவுன்சிலரே கோடிகளில் செலவிட வேண்டி வரலாம் என கட்சியில் இப்போதே பேசப்படுகிறது.
அந்த செலவை அமைச்சர், எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே செய்ய முடியும். சாதாரண கட்சி நிர்வாகிகளால் மேயர் பதவிக்கு போட்டியிடும் அளவுக்கு செலவிட முடியாது. அதனால், அவர்கள் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடத் தயங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும் கவுன்சிலர் தேர்தலில் தோல்வி அடைந்தால் கட்சியில் கவுரவமும் பறிபோகும் என்ற அச்சம் நிலவுகிறது.
அதுபோல, ஆரம்பத்தில் மேயர் தேர்தலில் ஆர்வம் காட்டிய அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் ராஜன் செல்லப்பா தரப்பினர் தற்போது அமைதியாக உள்ளனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார்களா? என்பது தற்போது வரை வெளிப்படையாகத் தெரியவில்லை. விருப்ப மனு கொடுத்துவிட்டு ரகசியம் காக்கலாம். ஆனால், மேயருக்கு மறைமுகத் தேர்தல் அறிவித்த பிறகு ஆளும்கட்சி வட்டாரத்தில் குதிரை பேரத்துக்கு அஞ்சி பல விஐபி நிர்வாகிகள் பின்வாங்கியது மட்டும் உண்மை, ’’ இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT