Published : 02 Dec 2019 09:27 PM
Last Updated : 02 Dec 2019 09:27 PM
பெண்கள் பாலியல் பலாத்காரம் குறித்து சர்ச்சையாகப் பேசியதாக எழுந்த புகாரில் நடிகர் பாக்யராஜுக்கு மாநில மகளிர் ஆணையம் இன்று சம்மன் அனுப்பியது. பாக்யராஜ் சார்பில் அவரது வழக்கறிஞர் இன்று ஆஜராகி டிச.14-ம் தேதி பாக்யராஜ் ஆஜராக விலக்கு பெற்றார்.
நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் தரமான, சிறப்பான பல திரைக்கதைகளை உருவாக்கியவர். இந்தியாவிலேயே சிறந்த கதாசிரியர் விருது பெற்றவர். ஆனால் சமீபத்தில் அவர் திரைப்பட விழா ஒன்றில், பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை என்று பாக்யராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற 'கருத்துக்களை பதிவுசெய்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது பழமொழி. ஆனால், அது உண்மைதான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.
பெண்கள் ஜாக்கிரதையாக இருந்தால் சரியாக இருக்கும். ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது'' என்கிற ரீதியில் பேசினார்.
பாலியல் பலாத்காரத்தில் பெண்கள் மீது குற்றம் சுமத்தியும், ஆண்களின் செயலை நியாயப்படுத்தும் வகையில் பாக்யராஜின் பேச்சு அமைந்ததாக பெண்கள் அமைப்புகள் சார்பில் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து ஆந்திர மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்தது. தமிழக மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் பாக்யராஜுக்கு தமிழக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. பெண்களைப் பற்றி அநாகரிகமான முறையில் பேசியதாக புகார் எழுந்த நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. டிச.2 (இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று பாக்யராஜின் வழக்கறிஞர் மகளிர் ஆணையம் முன் ஆஜரானார். பின்னர் வெளியில் வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''இன்று பாக்யராஜால் ஆஜராக முடியவில்லை, அவருக்கு ஷூட்டிங் இருப்பதால் வேறொரு தேதி கேட்டிருந்தோம். டிச. 14-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளனர், அன்று பாக்யராஜ் ஆஜராவார்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT