Published : 02 Dec 2019 02:32 PM
Last Updated : 02 Dec 2019 02:32 PM
எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் களத்திற்கு வந்தாலும், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) வெளியிட்ட அறிக்கையில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் குற்றேவல் புரியும் ஆணையமாக, மற்றொரு பழனிசாமி என்பவரின் தலைமையில் இயங்கும், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மாறி, எந்த சட்ட விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், நகர்ப்புற அமைப்புகளைத் தவிர்த்துவிட்டு, டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளதற்கு திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்று வருடங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முதுகெலும்பு இல்லாத இந்த ஆணையமும், தமிழக அரசும் இன்றைக்கு முழுமையாக அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் திணறி, விழி பிதுங்கி நிற்பது வெட்கக் கேடானது.
"எங்களுக்குத் தேர்தலைச் சந்திக்க தைரியம் இருக்கிறது" என்று அரசு மேடைகளில் வீராவேசம் பேசிய முதல்வர் பழனிசாமி, சில நாட்களிலேயே அதற்கு மாறாக, அத்து மீறிய அரசு அதிகாரம் என்ற மயக்கத்தில் இருந்து கொண்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தலை நடத்துங்கள் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் கெஞ்சியிருப்பது, மக்களைச் சந்திக்க முதல்வர் பழனிசாமிக்கு உள்ள அச்சத்தையும் மனநடுக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மாறி மாறி வாய்தா வாங்கி, பெய்யாத மழைக்கு ஒரு முறை ரெட் அலெர்ட் என்று பொய்யாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எல்லாம் சந்தித்தார்கள். பல்வேறு காலகட்டங்களில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் சரமாரியான குட்டுகள், கண்டனங்களை வாங்கியும், முதல்வரும் திருந்தவில்லை; மாநில தேர்தல் ஆணையரும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை.
ஆகவே, இனி மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தனி அலுவலகம் தேவையில்லை. அதிமுக தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையில் தனது அலுவலகத்தையும் நடத்திக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு தேர்தல் ஆணையம் ஐக்கியப்படுத்திக் கொண்டு, தரம் தாழ்ந்து தகுதி இழந்திருக்கிறது.
உயர் நீதிமன்ற நீதிபதிக்குரிய பணிப் பாதுகாப்பு உள்ள மாநிலத் தேர்தல் ஆணையர் தன் நிலை மறந்து, இப்படி ஆளுங்கட்சியின் ஏவலாளாக மாறி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காலில் போட்டு மிதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தொடக்கத்திலிருந்தே அரசும், தேர்தல் ஆணையமும் கைகோத்து, சதித் திட்டமிட்டு, குளறுபடிகளைச் செய்தன. மாவட்டங்களைப் பிரித்து, அந்த மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யவில்லை. பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீட்டைச் செய்யவில்லை. மாவட்டங்களுக்குச் செய்த துரோகம் தவிர, நேரடித் தேர்தலுக்குப் பதில் மறைமுகத் தேர்தல் என்று அவசரச் சட்டம் பிறப்பித்தார்கள்.
சட்டப்படியான நடைமுறைகளை முடித்து உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளார்கள். திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வார்டு மறுவரையறை குறித்து முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்கள். ஜனநாயகத்திற்கு விரோதமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, இரு மாவட்டங்களுக்கு ஒரு மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், ஒரு யூனியனுக்கு இரண்டு அல்லது மூன்று மாவட்ட ஆட்சியர்கள், இரு அல்லது மூன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என்று நிர்வாக அலங்கோலத்தின் மொத்த உருவமாக இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது கேவலமானது.
ஒரு மாவட்டப் பஞ்சாயத்திற்கு எந்த மாவட்ட நிர்வாகத்திலிருந்து நிதி ஒதுக்கப்படும் என்ற தெளிவுகூட இல்லை. பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி செயல்பட முடியாத ஒரு மாநிலத் தேர்தல் ஆணையர் தமிழ்நாட்டுக்குத் தேவையா என்ற முக்கிய கேள்வியே எழுந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு யாராவது நீதிமன்றம் சென்று தடை பெற வேண்டும் என்பது தமிழக அரசின் உள்நோக்கமாகவும் ஆசையாகவும் இருந்தாலும், திமுக ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆகவே, அதிகாரம், மாநிலத் தேர்தல் ஆணையம், பொங்கலுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே 1000 ரூபாய் விநியோகம் போன்ற எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுடன் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் களத்திற்கு வந்தாலும், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சந்திக்கும்.
அதுமட்டுமின்றி, மக்களின் பேராதரவுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் மாபெரும் வெற்றியைக் குவித்து, அதிமுக அரசின் முகத்தில் கரியைப் பூச திமுக தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும், மக்களும் தயாராகவே இருக்கிறார்கள்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...