Published : 02 Dec 2019 11:03 AM
Last Updated : 02 Dec 2019 11:03 AM

கோயில்களில் அன்னதானம் வழங்குபவர் விவரங்களை சேகரிக்க அதிகாரிகள் முடிவு: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

கோப்புப்படம்

சென்னை 

கோயில்களில் அன்னதானம் வழங்குபவர்களின் விவரங்களை சேகரிக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் 40,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி

முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்டவற்றில் தேர் திருவிழா, சூரசம்ஹாரம் போன்ற பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதுபோன்ற திருவிழா காலங்களில் கோயில் நிர்வாகத்தினர் சார்பில் பிரசாதங்கள், அன்னதானங்கள் வழங்கப்படும்.

சான்றிதழ் பெற வேண்டும்

இவ்வாறு, வழங்கப்படும் பிரசாதங்கள், அன்னதானங்கள் தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது சான்றிதழ் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில், சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட 38 கோயில்களின் சார்பில் பதிவு சான்றிதழ் அல்லது உரிமம் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

திருவிழா காலங்களில்..

இக்கோயில்களுக்கு பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இந்நிலையில், கோயில் திருவிழா காலங்களில் தனியார் மூலமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களும், இனிமேல் தற்காலிக பதிவுச் சான்றிதழை பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, கோயில்களில் அன்னதானம் வழங்குபவர்களின் விவரங்களை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோயில்களில் பக்தர்களுக்கு தரமான பிரசாதம் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இருப்பினும், திருவிழாக் காலங்களில் தற்காலிகமாக அன்னதானம் வழங்குபவர்களையும் முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கோயில்களில் தற்காலிகமாக அன்னதானம் வழங்குபவர்கள் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தரமான உணவு

அன்னதானம் வழங்க உள்ளதாக கோயில் நிர்வாகத்தினரை அணுகுபவர்களுக்கு பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என்று தெரிவிக்க வேண்டும். அவ்வாறு, வருபவர்களின் விவரங்களை உணவு பாதுகாப்புத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று தற்காலிகமாக அன்னதானம் வழங்குபவர்களின் விவரங்களை கோயில் நிர்வாகத்தினர் மூலம் சேகரித்து அவர்களுக்கு உணவுகளை தரமாக கையாள்வது குறித்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x