Published : 01 Dec 2019 06:19 PM
Last Updated : 01 Dec 2019 06:19 PM

சென்னையில் மழையை எதிர்கொள்ள மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார்: காவல் ஆணையர் தகவல் 

சென்னை

சென்னையில் மழையை எதிர்கொள்ள மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பெய்த அதிகனமழைக்குப் பிறகு, குறிப் பிடும்படியாக மழை பெய்ய வில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு அதே நாளில் சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால், மாநகராட்சி தலைமை நிர்வாகம், அனைத்து நிலை கள அலுவலர்களும் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு நேற்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாநகராட்சி தலைமையகமான, பேரிடர் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வரும் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர்களுக்கு டீசல் நிரப்பும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

சென்னை முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் உதவிக்கு அழைக்க சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது. மழை பாதிப்பு குறித்து 044-25384520, 044-25384530, 044-25384540 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று (01.12.2019) காலை, சென்னையில் மழைநீர் சூழ்ந்த கீழ்ப்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையை ஆய்வு செய்தார். காவல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு மழை நீரால் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி வாகனங்கள் சீராகச் செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் புளியந்தோப்பு ஜீவா ரயில் நிலைய ரயில்வே சுரங்கப்பாதை பகுதிக்குச் சென்று ஆய்வு செய்து, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எவ்வித சிரமுமின்றி சாலையைக் கடக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். மேலும், சென்னையில் உள்ள மற்ற இடங்களிலும் மழைநீர் சூழ்ந்த இடங்களில் உள்ள மழை நீரை அப்புறப்படுத்தி, நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

பின்னர் அப்பகுதிகளிலுள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் சரி செய்து நிவாரப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், சென்னையில் சாலையில் விழுந்த மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடவும், அனைத்து இடங்களில் காவல் அதிகாரிகள் மற்றும் அதி தீவிரப் படையினர் தயாராக உள்ளதாக காவல் ஆணையாளர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x