Published : 01 Dec 2019 05:14 PM
Last Updated : 01 Dec 2019 05:14 PM

நான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?- ஸ்டாலின் விளக்கம்

புதுக்கோட்டை

நான் ஏதோ முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு கொண்டிருக்கிறேன் என்று தவறான பிரச்சாரத்தை இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுகவின் மூத்த தலைவர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான திருநாவுக்கரசர், தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் ஸ்டாலின் பேசியதாவது:

''ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டுமென்று தெளிவாகச் சொல்லி இருக்கிறது. 1996-ல் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு மூன்று மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினோமா, இல்லையா? மூன்றாண்டுகளாக இந்த உள்ளாட்சித் தேர்தலை எப்படி தள்ளிப்போடுவது, யார் இதைத் தடுத்து நிறுத்துவார்கள், நீதிமன்றம் எப்படி இதை தடுத்து நிறுத்தும் என்ற சிந்தனையில்தான் ஆளும் கட்சியான அதிமுக இருக்கிறது. தொடர்ந்து, ‘திமுக நீதிமன்றத்துக்குச் சென்றதால் தான் உள்ளாட்சித் தேர்தல் தடைபட்டது’என்று தவறான தகவல்களைச் சொல்லி வருகிறார்கள். சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். நேற்று கூட செய்தியாளர்களிடத்தில் பேசும் பொழுது குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன்.

நீதிமன்றத்திற்கு திமுக சென்றது உண்மைதான். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிதான் வழக்குப் போட்டார். என்ன காரணத்தைச் சொல்லி வழக்குப் போட்டோம்? உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் வழக்குப் போட்டோம். இந்த சிக்கல்களை தீர்த்து வைத்து விட்டு தேர்தலை நடத்துங்கள் என்று தான் கோரிக்கை வைத்தோமே தவிர, தேர்தலையே நிறுத்துங்கள் என்று எங்கேயும் கோரிக்கை வைக்கவில்லை.

சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. திமுக வைத்த கோரிக்கை நியாயமானது, அதை சரி செய்யும்வரை தேர்தல் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு போட்டது. அது நாம் கேட்ட கோரிக்கை அல்ல. அதற்குப் பிறகும் தமிழக அரசு அதைச் சரி செய்யவில்லை. இப்போது உச்ச நீதிமன்றத்திற்குப் போயிருக்கிறது அந்த வழக்கு. வரும் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. அதற்குள் எல்லாவற்றையும் தமிழக அரசு சரிசெய்ய வேண்டாமா? இடையில் திடீரென்று மாவட்டங்களைப் பிரிக்கிறார்கள். மாவட்டங்களைப் பிரிப்பதால் மக்கள் பயன் அடைந்தால் அதை வரவேற்கிறோம். அதில் குறுக்கிட நாங்கள் விரும்பவில்லை. அந்த மாவட்ட மக்களுக்கு வளர்ச்சி வரும் என்றால் அதை உளப்பூர்வமாக வரவேற்கிறோம்.

அப்படிப் பிரிக்கிற நேரத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடிய இந்தச் சூழ்நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு, ஊராட்சித் தலைவர்களுக்கு இட ஒதுக்கீடு எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை தெளிவு படுத்துங்கள் என்று ஒரு முறையல்ல, நான்கு முறை மாநில தேர்தல் ஆணையத்திடம் நம் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக வழக்கறிஞர்கள், என்.ஆர்.இளங்கோவன், தலைமைக்கழக வழக்கறிஞர் கிரிராஜன் அவர்கள் ஆகியோர் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். 1989-ல் எடப்பாடி சட்டப்பேரவை உறுப்பினரான போதுதான் நானும் சட்டப்பேரவ்வை உறுப்பினர் ஆனேனாம். உண்மைதான். ‘1989-ல் சட்டப்பேரவை உறுப்பினரான நான் முதல்வராகி விட்டேன், ஆனால் ஸ்டாலின் இன்னும் முதல்வராகவில்லை’என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். எனக்கு மண்புழு போல ஊர்ந்து சென்று முதல்வராக விருப்பமில்லை. நமக்கென்று சுயமரியாதை இருக்கிறது. நான் கலைஞருடைய மகன்.

1989-ல் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை உறுப்பினராக வந்தார். நானும்1989-ல்தான் சட்டப்பேரவை உறுப்பினராக வந்தேன். ஆனால்1989க்கு முன்னால் எடப்பாடி பழனிசாமி எங்கே இருந்தார், நான் எங்கே இருந்தேன்? 1966-ல் பள்ளிக்கூட மாணவனாக கால் சட்டை அணிந்த போதே, அரசியலுக்குள் நுழைந்தவன் இந்த ஸ்டாலின்.

ஏறத்தாழ 40 ஆண்டுகள் அரசியலில் இருந்து, மிசா சட்டத்தில் கைதாகி, அதற்குப் பிறகு இளைஞரணிச் செயலாளராகி, திமுக செயற்குழு உறுப்பினராக, பொதுக்குழு உறுப்பினராக, திமுக துணை பொதுச் செயலாளராக, பொருளாளராக, செயல் தலைவராக, தலைவர் கலைஞரின் மறைவிற்குப் பிறகு இன்றைக்கு திமுக தலைவராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய நான் ஏதோ முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு கொண்டிருக்கிறேன் என்று தவறான பிரச்சாரத்தை இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x