Published : 10 Aug 2015 10:31 AM
Last Updated : 10 Aug 2015 10:31 AM
ஆற்றங்கரைகளில் புதைந்துபோன பண்டைய நாகரிக எச்சங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் சிற்றாறுகளை தேடும் பயணத்தை தொடங்கி இருக்கிறது மதுரையில் உள்ள நாணல் நண்பர்கள் குழு.
பண்டைய காலத்தில் நதிக்கரைகளிலேயே மனித நாகரிகம் தோன்றின. பேராறுகளில் அடிக்கடி வெள்ளம் வந்து நகரங்களை அழித்ததால் அங்கிருந்தும் இடம்பெயர்ந்த மனிதன் சிற்றாறுகளின் விளிம்புக்கு ஜாகை மாறினான். அங்கெல்லாம் புதுவிதமான நாகரிகங்களும் வளரத் தொடங்கின. இப்போது சிற்றாறுகளில் பெரும் பகுதி அடை யாளம் தெரியாமல் புதைக்கப்பட்டு விட்டன. அவற்றை கண்டுபிடித்து மக்களுக்கு அடையாளம் காட்ட களமிறங்கி இருக்கிறது நாணல் நண்பர்கள் குழு.
இதுகுறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
வைகை போன்ற பெரிய ஆறுகளே சாக்கடையாக மாறிவிட்டதால் சிற்றாறுகளைப் பற்றிய அக்கறை யாருக்கும் இல்லை. மதுரைக்கு மேற்கே நாகமலையில் உற்பத் தியாகி 80 கி.மீ. தூரம் பயணிக்கும் கிருதுமால்நதி 73 சங்கிலித் தொடர் கண்மாய்களின் நீர் ஆதாரம். அது இப்போது மதுரை மாநகருக்குள் முழு நீளச் சாக்கடையாக மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது. அழகர் மலையில் உற்பத்தியாகி வைகையில் சங்கமிக்கும் சிலம் பாறு சிலப்பதிகாரத்தில் சிறப்பு பெறுகிறது. இப்போது இந்த ஆற்றின் தொடக்கத்தைத் தவிர எஞ்சிய பகுதியை காணவில்லை.
நத்தத்தை சுற்றியுள்ள மலைகளிலிருந்து உருண்டோடி வரும் மழை நீரானது சிற்றாறு, திரு மணி முத்தாறு, சம்பையாறு, பாலாறு, விரிசலாறு ஆகிய ஆறுகளாக ஓடுகிறது. இதில், திருமணிமுத்தாறு மேலூர் வழியாக வைகைக்கு வரும். இப்போது இதுவும் கிரானைட் குவாரிகளால் விழுங்கப்பட்டுள்ளது. அலங்கா நல்லூர் பாலமேடு பகுதியின் மஞ்சள்மலையில் பிறந்து வைகைக்கு தவழ்ந்து வந்த மஞ்சள் மலை ஆறு அலங்காநல்லூருக்குப் பிறகு தடத்தை தொலைத்து விட்டது.
இதேபோல வைகையின் துணை ஆறுகளான அழகர் மலையில் கிடாரிப்பட்டியில் உற்பத்தி யாகும் உப்பாறு, திண்டுக்கல் சிறுமலையில் பிறந்து 26 கி.மீ. பயணிக்கும் சாத்தையாறு உள்ளிட் டவையும் மதுரை சதுரகிரி வனப்பகுதியில் தொடங்கி 150 கி.மீ. பயணித்து மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட் டங்களில் உள்ள 327 பெரிய மற்றும் 29 சிறிய கண்மாய்களை நிரப்பும் குண்டாறு, திருமங்கலம் சிவரக்கோட்டையிலிருந்து புறப் பட்டு 9614 ஏக்கரை விளைவிக்கும் கமண்டல நதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் பேரையூர் - சாப்டூர் காடுகளில் உற்பத்தியாகி கமண்டல நதியுடன் கலக்கும் வறட்டாறு இவை எல்லாமே குற்றுயிரும் குலை உயிருமாய் கிடக்கின்றன.
இந்த ஆறுகளை வெறும் ஓடை என்று மட்டுமே வருவாய்த் துறை வரைபடத்தில் வைத்திருக்கி றார்கள். வறட்டாறும் கமண்டல நதியும் சிவரக்கோட்டையில் கலக்கும் இடத்தில்தான் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததும் 6 ஆயிரம் ஆண்டுகள் வரையிலானதுமான இடைக் கற்கால நாகரிக எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேபோல முக்கியச் சிற்றாறுகளை ஒட்டிய பகுதிகளில் பண்டைய நாகரிக எச்சங்கள் பொதிந்திருக்கும். அவற்றை ஆய்வு செய்யவும் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் பண்டைய ஆறுகளை தேடும் பயணத்தைத் தொடங்கி இருக் கிறோம்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ‘ஆறுகளைத் தேடி’ என்ற பயணத்தின் மூலம் மக்களையும் அழைத்துச் சென்று, நாங்கள் கண்டுபிடிக்கும் ஆறுகளை அடை யாளம் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். மதுரையைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் இந்த தேடலை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்தாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT