Published : 01 Dec 2019 01:53 PM
Last Updated : 01 Dec 2019 01:53 PM
உள்ளாட்சியில் நல்லாட்சி தந்த நாயகன் ஸ்டாலின் முதல்வர் ஆகும் காலம் கனியும். ஸ்டாலின் விரைவில் அரியணை ஏறுவார் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பேசினார்.
புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுகவின் மூத்த தலைவர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான திருநாவுக்கரசர், தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் பி.டி.அரசகுமார் பேசியதாவது:
''நான் பெருமைக்காகவும் அரசியலுக்காகவும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு நான் ரசித்த ஒரு தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின்தான். நாம் வாழும் காலத்தில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பது நமக்குப் பெருமை.
அடுத்த முதல்வர், அடுத்த முதல்வர் என்று நிறைய பேர் இங்கு ஸ்டாலினைக் குறிப்பிட்டார்கள். தலைவர் ஸ்டாலின் எத்தனையோ முறை முதல்வருக்கு அருகாமையில் இருந்து ஆட்சி செய்வதற்கு ஆணித்தரமாய் அமர்ந்தவர். முதல்வர் இருக்கையைத் தட்டிப் பறிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் ஓர் இரவுக்குள் கூவத்தூர் சென்று பிரித்திருப்பார். ஆனால், ஜனநாயக முறைப்படி ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று காத்திருக்கிறார். காத்திருப்பு என்பது பொறுமை காத்தவன் பூமி ஆள்வான் என்பதைப் போல. நிரந்தரமாய் ஆள வேண்டிய திருநாள் வரும் என்று ஸ்டாலின் காத்திருக்கிறார்.
எனவே, எல்லோருக்கும் சொல்லும் அடுத்த முதல்வர் என்கிற வார்த்தையை ஸ்டாலினுக்கு சொல்லாமல் இருக்கலாம் என்பது என் கருத்து. உள்ளாட்சியில் நல்லாட்சி தந்த நாயகன் தமிழக முதல்வர் ஆகும் காலம் கனியும். ஸ்டாலின் விரைவில் அரியணை ஏறுவார்''.
இவ்வாறு அரசகுமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT