Published : 01 Dec 2019 10:27 AM
Last Updated : 01 Dec 2019 10:27 AM
டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த மழையால் 4 பேர் உயிரிழந்தனர்.
மின்கம்பம் சாய்ந்தது
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும் நேற்றும் இடைவிடாது மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பாபநாசம் வட்டம் மெலட்டூர் மூன்றாம்சேத்தியில் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சா.துரைக்கண்ணு(70) என்பவர் அந்த இடத்திலேயே இறந்தார்.
அய்யம்பேட்டை பசுபதிகோவில் அருகே புதுமாத்தூர் சாலையில் மின்கம்பம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. பாபநாசம் அருகே அரையபுரம் மேட்டுத் தெருவில் க.ஜானகி என்பவரின் குடிசை வீடு, சாக்கோட்டை 11 வேலி மேலத்தெருவில் து.காளிதாஸ் என்பவரது கூரை வீடு ஆகியவை இடிந்து விழுந்தன. மாவட்டத்தில் 36 கடலோர கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
விடிய விடிய கனமழை
திருவாரூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்த அதிர்ச்சியில் ரவிச்சந்திரன் என்பவர் உயிரிழந்தார். திருவாரூர் சேந்தனங்குடி பகுதியில் குமார் என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. மன்னார்குடி இந்திரா நகர் பகுதியில் உள்ள வாய்க்காலில் ஏற்பட்ட சிறு உடைப்பு உடனடியாக சரிசெய்யப்பட்டது. திருத்துறைப்பூண்டி பகுதியில் கச்சனம், காடுவா கொத்தமங்கலம், பூசலாங்குடி, கோட்டூரிலும், முத்துப்பேட்டை பகுதிகளிலும் வயல்களில் தண்ணீர் சூழ்ந்து வருவதால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மழைநீருடன் கழிவு நீர் கலப்பு
நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை விட்டுவிட்டு கனமழை பெய்தது. நேற்று காலை 10 மணி முதல் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. திட்டச்சேரி புதுத்தெருவில் முகமது முஜாஹித் என்பவரது ஓட்டு வீட்டின் மேற்கூரை சரிந்தது.
வேளாங்கண்ணி பிரதான சாலை மேடும் பள்ளமாக இருப்பதால், பள்ளங்களில் நீர் நிரம்பி குளம் போல உள்ளதால் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிக்குள்ளாகினர். நாகையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் குளம்போல தண்ணீர் தேங்கியுள்ளது.
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நீருடன் புதைச் சாக்கடை கழிவுநீர் தொட்டிகளில் இருந்து வெளியேறிய கழிவுநீரும் சேர்ந்ததால் பொதுமக்கள் சுகாதார சீர்கேடு அச்சத்தில் உள்ளனர். கனமழை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. காரைக்காலில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் ஆறுபோல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டத்தில் உள்ள கிளியூர் பகுதியில் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் வயல்களை தண்ணீர் சூழ்ந்ததால், நெற்பயிர்கள் இருதினங்களாக நீரில் மூழ்கியுள்ளன.
இதுகுறித்து திருவெறும்பூர் வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளர் கிளியூர் சங்கிலிமுத்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியபோது, ‘‘இப்பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் கடந்த 3 ஆண்டுகளாக தூர் வாரப்படாததால், கோரைப் புற்களும், முள்செடிகளும் அதிக அளவில் முளைத்து, நீரோட்டத்தை தடுக்கின்றன. எனவே கோரைப்புற்கள், முள்செடிகளை விரைந்து அகற்ற பொதுப்பணித் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
துவாக்குடி வடக்கு மலை பகுதியைச் சேர்ந்த குழந்தையம்மாள் என்பவரது வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. திருச்சி- தஞ்சாவூர் சாலையில் பழைய பால்பண்ணை சந்திப்பு அருகே தேங்கிய மழைநீரில் வாகனங்கள் செல்ல பெரும் சிரமப்பட்டன. மாநகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கிய நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். திருச்சி மாவட்டத்தில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் மழை பெய்தது. அதிகபட்சமாக பொன்மலையில் 47.6 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று விட்டுவிட்டு மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 22 மில்லி மீட்டர் மழை பதிவானது.
வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அடைமழை பெய்து வந்ததால் வெளி நடமாட்டத்தை தவிர்த்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மாவட்டத்தில் புதுக்கோட்டையில் நேற்று அதிக அளவாக 130 மில்லி மீட்டர் மழை பதிவானது.
அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. பெரியார் நகர், கம்பன் நகர், கூடல் நகர், முத்துநகர், மீனாட்சி நகர் உள்ளிட்ட சாலைகளில் காட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடுவதுபோன்று மழைநீர் ஓடியது. புதுக்கோட்டை பழனியப்பா கார்னர் பகுதியில் மழையால் குளிர், நடுக்கத்தில் தடுமாறி விழுந்த வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த கந்தசாமி(65) உயிரிழந்தார். புதுக்கோட்டை மேட்டுத் தெருவில் மழையால் வீடு இடிந்ததில் பாத்திமா பீவி(18) என்பவர் காயமடைந்தார். கறம்பக்குடி அருகே விஜயரகுநாதப்பட்டியில் எம்.சண்முகம், அன்னவாசலில் பகுருதீன் ஆகியோரது ஓட்டு வீடுகள் இடிந்தன.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தெருக்களில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். தா.பழூர் அருகே கோவிந்தபுத்தூர் மாரியம்மன் கோயில் தெருவில் மழைநீர் தேங்கியதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். விக்கிரமங்கலம் அடுத்த முனியங்குறிச்சியில் செல்லக்கண்ணு என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அவ்வழியே நடந்து சென்ற சாமிக்கண்ணு என்பவரின் மகள் பூங்கோதை(40) இடிபாடுகளில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT