Published : 01 Dec 2019 08:08 AM
Last Updated : 01 Dec 2019 08:08 AM

ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய எஸ்கலேட்டர் வசதி தொடக்கம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய எஸ்கலேட்டர் வசதியை திமுக எம்பி தயாநிதிமாறன் நேற்று தொடங்கி வைத்தார். உடன், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி, மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர்

சென்னை 

எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடியே 12 லட்சம் செலவில் அமைக்கப் பட்ட புதிய எஸ்கலேட்டர் வசதியை எம்பி தயாநிதிமாறன் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை சென்ட்ரலுக்கு அடுத்து பெரிய ரயில் நிலையமாக இருக்கும் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக் கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, திமுக எம்.பி தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏற்கெனவே ஒதுக்கிய ரூ.2 கோடியே 12 லட்சம் மூலம் எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 7-ல் புதிய எஸ்கலேட்டர் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் பி.மகேஷ் வரவேற் புரை ஆற்றினார். பின்னர், திமுக எம்பி தயாநிதிமாறன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆகியோர் புதிய எஸ்கலேட்டரை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தனர்.

விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் பேசும்போது, ‘‘ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். அதன்படி, எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்கம், எஸ்கலேட்டர் வசதி, நடைமேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.16 கோடியே 23 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்தவுடன் பயணிகளின் சேவைக்கு படிப்படியாக திறக்கப்படும்’’ என்றார்.

எம்.பி தயாநிதிமாறன் பேசும்போது, ‘‘ரயில் நிலையங்களில் கழிப்பிட வசதிகள், நடைமேம்பாலங்கள், லிஃப்ட் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதுபோல், ரயில்களில் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க நடவடிக்கை வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நடைமேடையில் ஏறவும், இறங்கவும் வசதியாக இருபுறமும் எஸ்கலேட்டர் வசதியை கொண்டுவர வேண்டும். எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடியே 12 லட்சம் செலவில் இந்த எஸ்கலேட்டர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. 2 முறை எம்பியாக இருந்தபோது பல்வேறு பணிகளுக்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இதுவரை ரூ.20 கோடியை தெற்கு ரயில்வேக்கு வழங்கியுள்ளோம்’’ என் றார்.

இந்த விழாவில் திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி, எம்எல்ஏக்கள் சேகர்பாபு, தாயகம் கவி, ரவிச்சந்திரன் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x