Published : 12 Aug 2015 12:44 PM
Last Updated : 12 Aug 2015 12:44 PM
கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் சுந்தர் பிச்சையின் அடையாளத்தை தங்கள் கல்வி நிறுவனத்துடன் சேர்த்து பெருமை தேடிக் கொள்ள சென்னையில் நேற்று (செவ்வாய்கிழமை) சுவாரசியமிகு கடும் முயற்சி நடந்திருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியான சில நிமிடங்களில் அந்தத் தேடல் தொடங்கிவிட்டது.
ஆம், சென்னையில் பிரபல பள்ளிகள் சிலவும், மீடியாக்கள் சிலவும் இணைந்து சுந்தர் பிச்சையின் பள்ளி வாழ்க்கை வேரைத் தேடத் தொடங்கின.
சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் 1989-க்குப் பிறகு சுந்தர் பிச்சை சென்னை நகரைவிட்டு வெளியேறிவிட்டார் என்ற தகவலே முதலில் கிடைக்கப்பெற்றது.
அடுத்தபடியாக சென்னை ஜவஹர் வித்யாலயா பள்ளியில் சுந்தர் பிச்சை படித்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இது குறித்து, சென்னை அசோக்நகர் ஜவஹர் வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஆலிஸ் ஜீவன் கூறும்போது, "ஊடகங்கள் மூலமே சுந்தர் பிச்சை கூகுள் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது தெரியவந்தது. அதன் பின்னர் எங்கள் பள்ளி ஆவணங்களை சரி பார்த்தபோது சுந்தர் பிச்சை கடந்த 1979 முதல் 1987 வரை எங்கள் பள்ளியில் படித்தது உறுதியானது. அவரது மாற்றுச் சான்றிதழ் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது அவரைப் பற்றிய வேறு தகவல் ஏதும் கிடைக்கவில்லை. சுந்தர் பிச்சை ஒருவேளை சுட்டிக் குழந்தையாக இருந்திருந்தால் அவர் நினைவில் நின்றிருப்பார். அவரோ அமைதியான பையனாக இருந்தார்" என்றார்.
11 மற்றும் 12-ம் வகுப்பை சுந்தர் பிச்சை தங்களது பள்ளியில் தான் படித்தார் என வேளச்சேரி வனவாணி பள்ளி தெரிவித்துள்ளது. ஆனால், அவர்களுக்கு இன்னமும் சுந்தர் பிச்சை தங்கள் படித்ததற்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை.
பள்ளிகள் ஒருபுறம் சுந்தர் பிச்சை குறித்த தகவல்களைத் தேடிக் கொண்டிருக்க, ஜவஹர் வித்யாலயா பள்ளி மாணவர் ஏ.எஸ்.குமார் என்பவர் ஜெ.வி. பியாண்ட் பேட்சஸ் (JV Beyond Batches) என்ற ஃபேஸ்புக் குழுமத்தை இயக்கி வருகிறார். அவர் அமெரிக்காவில் இருக்கும் சுந்தர் பிச்சையின் பெற்றோர் அந்த ஃபேஸ்புக் குழுமத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் சென்னையில் உள்ள சுந்தர் பிச்சையின் பாட்டி ரங்கநாயகியை சந்தித்துள்ளார். ஆனால் 91 வயதான ரங்கநாயகியால் தனது பேரனின் பதவி உயர்வுக்கு மகிழ்ச்சி தெரிவிக்க முடிந்ததே தவிர பெரியளவில் தகவல்களை தர முடியவில்லை.
அசோக் நகரில் உள்ள அவரது பூர்விக வீட்டின் அருகே வசிப்பவர்கள் சுந்தர் பிச்சை இந்த வீட்டில் இருந்தபோது எப்போதாவது பேட்மிண்டன் விளையாட வெளியே வருவார் மற்றபடி அவருடன் பெரியளவில் நட்பு இல்லை என்றனர்.
திணறடிக்கப்பட்ட விக்கிப்பீடியா:
சுந்தர் பிச்சையின் புதிய பதவி குறித்த தகவல் வெளியான பிறகு விக்கிபீடியாவில் அவர் கல்வி குறித்த தகவல்களை பதிவு செய்யும் வகையில் அந்த குறிப்பிட்ட பக்கம் 100-க்கும் மேற்பட்ட முறை 'எடிட்' செய்யப்பட்டிருக்கிறது. கே.கே.நகர் பி.எஸ்.எஸ்.பி பள்ளி, அசோக் நகர் ஜவஹர் வித்யாலயா, வேளச்சேரி வனவாணி, ஆல் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் என பல்வேறு பள்ளிகள் சுந்தர் பிச்சைகு சொந்தம் கொண்டாடியிருந்தன.
திணறடிக்கப்பட்ட விக்கிப்பீடியா ஒரு கட்டத்தில் சுந்தர் பிச்சையின் பக்கத்தை தனது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தது. அதன் பின்னர் சுந்தர் பிச்சையின் விக்கிபீடியா பக்கத்தை எடிட் செய்ய விரும்பியவர்களுக்கு "இந்த பக்கம் பாதுகாக்கப்பட்டுள்ளது" என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது.
சுந்தர் பிச்சையின் அடையாளத்தை தங்கள் கல்வி நிறுவனத்துடன் சேர்த்து பெருமிதம் தேடிக் கொள்ள பலரும் அலைந்து திறிய, சத்தமே இல்லாமல் அந்த முயற்சிகளுக்கு இடைக்கால முற்றுப்புள்ளி வைத்தது விக்கிபீடியா.
ஆம்... சுந்தர் பிச்சை குறித்த பக்கத்தில், "சுந்தர் பிச்சை தனது பள்ளிப் படிப்பு முழுவதையும் சென்னையில் மேற்கொண்டார்" என பொத்தாம் பொதுவாக எடிட் செய்துவிட்டது விக்கிபீடியா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT