Published : 30 Nov 2019 02:51 PM
Last Updated : 30 Nov 2019 02:51 PM
இந்துத்துவ கொள்கை கொண்ட சிவசேனாவை திமுக ஆதரிக்கிறதாக எழுந்த விமர்சனத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (நவ.30) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "இரவில் வாங்கினோம்; இன்னும் விடியவில்லை என்பது, இந்திய சுதந்திரம் பற்றிய, புகழ்பெற்றதும், எதார்த்த நிலையை எடுத்து இயம்புவதுமான, புதுக்கவிதை வரிகள். விடிவதற்குள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும், 'குரங்கு கை பூமாலை' போலப் பிய்த்தெறிந்திட வேண்டும் என, அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியை நடத்துகிற மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்பதற்கு, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற 'கிளைமேக்ஸ், ஆண்ட்டி கிளைமேக்ஸ்' காட்சிகளே சாட்சிகள்.
அங்கே அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கூட்டணிக் கட்சியின் கோரிக்கைகளுக்கு உடன்படாத காரணத்தால், மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையில், தங்களைத் தவிர வேறு யாரும் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என பாஜக தனது அதிகாரத்தைக் கொண்டு அத்துமீறல்களைத் தொடங்கியது
சட்டப்பேரவையை முடக்கி, குடியரசு தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைத்தார், பாஜக அரசால் மகாராஷ்டிராவில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பகத்சிங். வழக்கம்போல வெளிநாட்டுப் பயணத்திற்கு ஆயத்தமாகியிருந்த பிரதமர் மோடி, அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி, குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் தெரிவித்தார். ஆட்சி அமைக்க பிற கட்சிகளுக்கு வழியில்லாத நிலையில், பாஜகவின் குதிரை பேரம் ஆரம்பமானது. அந்த பேரம் படிந்துவிட்டதாகக் கருதி, நவம்பர் 23 அன்று நள்ளிரவு கடந்து, அவசர அவசரமாக மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது.
குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு, அமைச்சரவையை அவசரமாகக் கூட்டி முடிவெடுத்த பிரதமர், அதனை விலக்கிக் கொள்வதற்கு அமைச்சரவையைக்கூட கூட்டவில்லை. சட்டத்தின் சந்து பொந்துகள் வழியே, தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இரவோடு இரவாக குடியரசு தலைவர் ஆட்சியை ரத்து செய்து, பிற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதற்காக, அதிகாலையிலேயே பாஜகவின் முதல்வர் பட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
பெரும்பான்மைக்குப் போதுமான சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கிறார்களா என உறுதிப்படுத்திக்கொள்ளும் அடிப்படை ஜனநாயக எண்ணம் கூட இல்லாமல், அவசரக் கோலத்தில் நடைபெற்ற இந்தக் கூத்துகள் யாவும் ஜனநாயகம் எனும் கற்பூரத்தின் நறுமணம் அறியாத கூட்டத்தாரிடம் கடுமையாகச் சிக்கி, சின்னாபின்னப்படுத்தப்படும் கொடூரத்தையே வெளிப்படுத்துவதாக இருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டினால், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட உத்தரவிட்ட நிலையில், தன்னிடம் பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த பாஜக முதல்வர் பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். துணை முதல்வர் அஜித் பவாரும் ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிர மண்ணில் ஜனநாயகத்தை நிலைநாட்டிடும் நோக்கத்துடன் சிவசேனா கட்சிக்கு காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் ஆதரவளித்தன. பெரும்பான்மைக்குத் தேவையான சட்டப்பேரவை உறுப்பினர்கள் அந்தக் கூட்டணிக்கு இருந்ததால், வேறு வழியின்றி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவைப் பதவியேற்றிட அழைத்தார் ஆளுநர்.
ஜனநாயகப் படுகொலையால் இரண்டு முறை ஆட்சியை இழந்த இயக்கம், திமுக. இந்தியாவில் எந்த மாநிலத்தில், எப்போது இத்தகைய கொடூரம் நிகழ்ந்தாலும், உடனடியாக தன் உணர்வை வெளிப்படுத்தவும், பாதிக்கப்படும் ஜனநாயக சக்திகளுக்கு தார்மீக ஆதரவைத் தெரிவிக்கவும் அண்ணா, கருணாநிதி காலத்திலிருந்து இன்று வரை, திமுக தயங்கியதோ தவறியதோ இல்லை.
நேற்று (நவ.29) நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பரூக் அப்துல்லா சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் பல மாதங்களாக வைக்கப்பட்டு, ஜனநாயக நெறிமுறைகள் படுகொலை செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டி எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர்.
மகாராஷ்டிர மண்ணில் நடந்த ஜனநாயக விரோதச் செயல்பாடுகளையும் இதே கண்ணோட்டத்துடன்தான் திமுக அணுகியது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அங்கே புதைகுழியிலிருந்து ஜனநாயகம் மெல்ல உயிர்த்தெழுந்த நிலை கண்டதும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நவ.27 அன்று தொலைபேசி வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
குறுக்கு வழியில், குதிரை பேரம் மூலமாக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வியூகம் வகுத்தவர்களெல்லாம் சாணக்கியர்களாகக் காட்டப்பட்ட நிலையில், தனது நீண்டகால அரசியல் அனுபவத்தாலும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினாலும் அந்த குதிரை பேரக் கூட்டத்தாரின் வியூகங்களை முறியடித்து, மாநில நலன் காக்கும் வகையில் கூட்டணியை உருவாக்கி, புதிய ஆட்சி அமைவதற்கு சூத்திரதாரியாகச் செயல்பட்டவரான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன்.
தலைவர் கருணாநிதி மீது பெருமதிப்பு கொண்டவரான சரத்பவார் அவர்கள், தலைவர் கருணாநிதி கட்டிக்காத்த திமுகவுக்கு தலைமையேற்று நடத்தும் பொறுப்பைச் சுமந்திருக்கும் என் வாழ்த்துகளை அன்புடன் ஏற்றுக்கொண்டதுடன், சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணியின் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்க வேண்டும் என அன்பழைப்பினை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்டு, மும்பை செல்ல ஆயத்தமானேன்.
பதவியேற்பு நாளான நவம்பர் 28 அன்று காலை 11 மணியளவில், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுடன் விமானத்திலிருந்து தரையிறங்கியபோது, "நாம் வந்திருப்பது மும்பையா? சென்னையா?" என வியக்கும் வகையில், விமான நிலையத்தில் கறுப்பு - சிவப்புக் கொடிகளை ஏந்தி, கொள்கை உணர்வுடன் மகாராஷ்டிர மாநில திமுகவினர் திரண்டிருந்தனர்.
மும்பையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டலுக்கு வருவதற்கு மதியம் 2.30 மணி ஆன நிலையில், மதிய உணவுக்குப் பின், மகாராஷ்டிர மாநில அரசியல் பிரமுகர்கள் பலர் அன்பும் ஆர்வமும் பெருகிட சந்தித்து மகிழ்ந்தனர். ஜனநாயகத்தைக் காத்திட்ட கூட்டணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏறத்தாழ 20 பேர் அங்கு வந்திருந்து என்னைச் சந்தித்து உரையாடியதுடன், செல்ஃபி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர். அம்மாநில முன்னாள் முதல்வர்களான வி.பி.நாயக் மற்றும் சுதாகர்ராவ் நாயக் ஆகியோரின் பேரன்களும் வந்திருந்தனர். அப்போது, இளைய தலைமுறையினரின் அரசியல் ஆர்வத்தையும், திமுக மீதான அவர்களின் அன்பையும் அறிந்துகொள்ள முடிந்தது.
மாலை 5 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் வருகை தந்து, என்னையும் திமுகவினரையும் பதவியேற்பு விழா நடைபெற்ற சிவாஜி திடலுக்கு அழைத்துச் சென்றனர். பதவியேற்புக்குப் பொருத்தமான இடம்தான் என நினைத்துக் கொண்டேன்.
மகாராஷ்டிர மன்னன் சத்ரபதி சிவாஜி பல போர்க்களங்களை வென்றபோதும், அவரைப் பதவியேற்க விடாமல் சூழ்ச்சி செய்த கூட்டத்தாரின் தில்லுமுல்லுகளையும், அதனை சத்ரபதி சிவாஜி முறியடித்து ஆட்சி செய்ததையும் அண்ணா 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடகத்தில் அம்பலப்படுத்தியிருப்பார்.
வி.சி.கணேசன் என்ற மகத்தான கலைஞனை சிவாஜி எனும் நடிகர் திலகமாக நமக்கு வழங்கிய அந்த வரலாற்று நாடகம் போலவே, இப்போதும் மகாராஷ்டிராவில் சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்ட நிலையில், சிலந்தி வலை போல அதனை அறுத்தெறிந்து ஜனநாயகம் சிதறிவிடாமல் மீட்கப்பட்ட நிலையில், சிவாஜி பெயரில் அமைந்த திடலில் பதவியேற்பு விழா நடத்துவது பொருத்தம்தானே!
பதவியேற்பு விழாவுக்கான மேடையில் மகாராஷ்டிர மாநில அரசியலின் முக்கியத் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகமது படேல், கே.சி.வேணுகோபால், கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி போன்ற மூத்த தலைவர்களும், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட பலரும் அமர்ந்திருந்தனர். தேசியவாத காங்கிரஸின் முன்னணித் தலைவரும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே மிகுந்த அன்புடன் என்னை வரவேற்று நெகிழச் செய்தார்.
தமிழ்நாட்டின் சார்பில், திமுகவின் தலைவர் என்ற முறையில் சென்றிருந்த எனக்கு, மேடையில் நடுநாயகமாக அமரும் வாய்ப்பினைத் தந்தனர். அது தனிப்பட்ட எனக்கானது அல்ல; ஜனநாயகம் காக்கும் போரில் சமரசமின்றிப் பங்கேற்கும் திமுக எனும் மகத்தான பேரியக்கத்திற்கு அளிக்கப்பட்ட மரியாதை!
மேடைக்கு வந்த சரத்பவார், நேராக என்னிடம் வந்து நலன் விசாரித்த நிகழ்வும், இந்திய அரசியலில் திமுக எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயக்கமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டியது.
முதல்வர் பொறுப்பேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தபோது, அவரும் என் மீது தனிப்பட்ட அன்பு செலுத்தினார். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் வாழும் 10 லட்சம் தமிழர்களின் நலன் காக்கும் வகையில் செயல்பட அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன், சிவசேனா கட்சி சார்பில் இரண்டு பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு பேரும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் இரண்டு பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். விழா நிறைவடைந்து மேடையை விட்டு இறங்கிய நிலையிலும், மூத்த தலைவர்கள், மராட்டிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது துணைவியார் உள்ளிட்ட பலரும் நலன் விசாரித்தனர்; அன்பு காட்டினர்.
தலைவர் கருணாநிதி உயிர்மூச்சாகக் கடைப்பிடித்த சமூகநீதிக் கொள்கையும், மாநில உரிமையும் இன்றைய நிலையில் எந்த அளவுக்கு அவசியமாகிறது என்பதைப் பலரும் என்னிடம் எடுத்துரைத்தனர்.
செல்ஃபிகளால் சூழ்ந்த நிலையில், காவல்துறை உயரதிகாரிகள் உடன்வர, வாகனத்தை அடைந்து, விமான நிலையத்திற்குப் புறப்படுகிற வரை அன்பு மழை பெய்த வண்ணமே இருந்தது, ஓயவேயில்லை!
மாநிலக் கட்சியான திமுக எனும் பேரியக்கம், மீண்டும் மீண்டும் இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத ஆற்றல் மிகுந்த சக்தியாக விளங்குகிறபோது, அன்பான எதிரிகளான அரசியல் பிரமுகர்கள் சும்மா இருப்பார்களா?
இந்துத்துவ கொள்கை கொண்ட சிவசேனாவை திமுக ஆதரிப்பதா? மகாராஷ்டிர தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்ட பால்தாக்கரேவின் கட்சிக்குத் துணை நிற்பதா? என திமுகவை நோக்கி கேள்விக் கணைகள் பாய்கின்றன.
மாநிலக் கட்சிகளாக இருந்தாலும், கொள்கைரீதியாக திமுகவும் சிவசேனாவும் மாறுபட்டவை. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படையில் அனைத்து மதத்தினர்-சாதியினருக்குமான சமத்துவத்தை நிலைநாட்டும் சமூகநீதிதான் திமுகவின் கொள்கை. அதேநேரத்தில், ஜனநாயகத்தின் கழுத்தில் கொடுவாள் பாய்ச்சப்படும்போதும், குதிரைபேரத்தால் ஜனநாயகத்திற்குப் புதைகுழி தோண்டப்படும்போதும், மாநில உரிமைகளைப் பாதுகாத்து, ஜனநாயகத்தை மீட்டெடுத்திட தார்மீக ஆதரவினை வழங்குவது என்பதே திமுகவின் நிலைப்பாடு.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் வெளிப்பட்டன. ஆனால், திமுக ஒருபோதும் பாஜக வழியில் செல்லவில்லை. பாஜகவின் குறிக்கோள்களாக இருந்த ராமர் கோயில் கட்டுவது, 370-வது பிரிவு நீக்கம், பொதுசிவில் சட்டம் ஆகியவற்றை ஓரங்கட்டச்செய்து, மாநிலங்களின் வளர்ச்சி அடிப்படையிலான குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை உருவாக்கி அதனடிப்படையில்தான் வாஜ்பாய் அரசை ஆதரித்து, அதில் திமுக பங்கேற்றது.
இப்போது மகாராஷ்டிராவிலும் சிவசேனாவின் கொள்கைகளுக்கு நேரெதிர் கட்சிகளான தேசியவாத காங்கிரஸும், இந்திய தேசிய காங்கிரஸும், மாநிலத்தின் உரிமைகளைக் காத்திடவும், மாநில மக்களின் நலனைக் கருத்திற்கொண்டும் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இணைந்து மதச்சார்பற்ற ஆட்சி அமைத்துள்ளன.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலும், "மகாராஷ்டிரா மாநிலத்திற்கான ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வழங்கும் என நம்புகிறேன்" எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளேன்.
சிவசேனா கட்சி தொடங்கப்பட்டபோது, அது, 'மகாராஷ்டிர மண்ணின் மைந்தர்' முழக்கத்துடன், அம்மாநிலத்தில் வாழ்ந்த தமிழர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய காலம் இருந்தது. தாக்குதல்களும் நடைபெற்றிருக்கின்றன. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டால், தமிழ்நாட்டில் வாழும் வடஇந்தியர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் அபாயச் சூழலை விளக்கி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அதன்பிறகு, மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களிலும் தமிழர்கள் மீதான தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது.
அதுமட்டுமல்ல, 1978-ல் தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தலைவர் கருணாநிதி மும்பை சென்றார். மும்பைக்குச் செல்கின்ற அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும், பால்தாக்கரே அவர்களை வீடு தேடிச் சென்று சந்திப்பதுதான் வழக்கம். ஆனால், பால்தாக்கரே அவர்கள் தலைவர் கருணாநிதி தங்கியிருந்த ஓபராய் ஓட்டலுக்கு நேரில் வந்து சந்தித்து உரையாடினார். மாநில உரிமைகள் தொடர்பாக தலைவர் கருணாநிதி கடைப்பிடித்த உறுதியான நிலைப்பாட்டினைப் பாராட்டினார். மகாராஷ்டிர தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதத்தில் அந்தச் சந்திப்பு அமைந்தது.
2001 ஆம் ஆண்டு தலைவர் கருணாநிதி நள்ளிரவில் சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்யப்பட்டபோது, அதனைக் கண்டித்தவர் பால்தாக்கரே. சிவசேனாவின் 'சாம்னா' பத்திரிகையிலும் அந்தக் கைதினைக் கண்டித்து செய்தி வெளியிடப்பட்டது.
அடிப்படைக் கொள்கைகளில் பல வேறுபாடுகள் இருந்தாலும், ஜனநாயகத்தின் மாண்பையும் மாநிலத்தின் நலன்களையும் பாதுகாப்பதற்கான புதிய தொடக்கமாக அமைந்திருக்கிறது மகாராஷ்டிர உறவு. அதிகாரக் கொம்பில் தொங்கிக் கொண்டு ஜனநாயகப் பூமாலையைப் பிய்த்தெறிய நினைத்த பிற்போக்கு சக்திகளிடமிருந்து அதனைப் பத்திரமாக மீட்டெடுத்திருக்கிறது, மகாராஷ்டிர முதல்வர் பதவியேற்பு விழா.
திமுக அதில் பங்கேற்றதும், அதற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டதும்; ஜனநாயகம் காக்கும் தொடர்ச்சியான போரில் திமுக எப்போதும் இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம் என்ற பெருமிதத்தால்தான்"
என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT