Published : 30 Nov 2019 02:43 PM
Last Updated : 30 Nov 2019 02:43 PM

கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளிகள் எத்தனைபேர்?- அறிக்கை கேட்கிறது மாநில மனித உரிமை ஆணையம்

சென்னை

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 10 நாட்களில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில், நான்கு பேர் , பல்வேறு காரணங்களால் மரணமடைந்துள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோயாளிகளை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நான்கு பேர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஐந்து பேர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் முழுநேர மருத்துவருடன் அவசர சிகிச்சைப் பிரிவை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமாக தனியார் ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்காக (suo motto)விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், கடந்த மூன்று ஆண்டுகளில் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் எத்தனை மரணங்கள் நிகழ்ந்துள்ளன?, அதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி, தமிழக மருத்துவ கல்வி இயக்குனருக்கும், மனநல காப்பக இயக்குனருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நோய் தாக்காமல் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க அடிப்படை மருத்துவ வசதிகள் உள்ளனவா? இல்லை என்றால், மருத்துவ வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய உறுப்பினர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x