Published : 29 Nov 2019 04:27 PM
Last Updated : 29 Nov 2019 04:27 PM
விருதுநகரின் பிரதானப் பகுதியில் அமைந்திருந்தாலும் ஊராட்சிப் பகுதி என்பதால் தூர்வாரப்படாமல் புதர் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது சிவகாசியில் உள்ள கடம்பன்குளம்.
விருதுநகர் மாவட்டத்தில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு, அச்சுத் தொழில் மட்டுமின்றி அண்மையில் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களும் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது கடம்பன்குளம்.
சிவகாசி நகரை ஒட்டியுள்ள பள்ளபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது இந்த கடம்பன்குளம். 22 எக்டேர் பரப்பளவு கொண்டு இக்குளத்தைச் சுற்றிலும் சுமார் 14 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன.
சுமார் 50 ஆயிரம் மக்கள் தொகையும் அவர்களில் 21,500 பேருக்கு ஓட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மழைக் காலத்தில் நீர் நிரம்பி 3 மடைகள் வழியாக தண்ணீர் திறந்துவிட்டு பல ஏக்கர் விவசாயமும் நடந்து வந்தது.
நகரை ஒட்டியிருந்தாலும் ஊராட்சிப் பகுதி என்பதால் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் கண்களை இக்குளம் உறுத்துவதே இல்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நீர் நிறைந்து பசுமை நிரைந்த பகுதியாக காணப்பட்ட கடம்பன்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் தற்போது சீமைக்கருவேல மரங்கள் மட்டுமே ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன.
வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக குளத்திற்கு நீர் வருவதும் தடுத்து நிறுத்தப்பட்டு விடுகிறது. இதனால் மழை நீர் வடிய வழியின்றி குடியிருப்புகளைச் சூழ்ந்துகொள்கிறது.
அதுமட்டுமின்றி, சிவகாசியில் அண்மையில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் பதுங்கிக்கொள்ளும் கூடாரமாகவும் கடம்பன்குளம் மாறி வருகிறது.
காட்டுப் பகுதிக்குள் ஓடி தப்பித்துக்கொள்ள முடியும் என்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் கடம்பன்குளம் மாறியுள்ளது. அன்மையில், சிவகாசியில் நடந்த இரட்டைக் கொலையில் சடலங்கள் கடம்பன் குளம் அருகே வீசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பள்ளபட்டி ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கடம்பன் குளத்தில் முட்புதர்கள் நிறைந்துள்ளதால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதோடு, கொலை, கொள்ளை, வழிப்பறிகளில் ஈடுபடுவோர் கடம்பன் குளத்திற்குள் சென்று பதுங்கிக் கொள்கிறார்கள். அது குற்ற சம்பவங்களுக்கு திட்டம் தீட்டும் இடமாகவும் மாறி வருகிறது.
ஊராட்சி பகுதி என்பதால் கடம்பன் குளம் முறையாக தூர்வாரப்படாமல் கைவிடப்பட்டுவிட்டது. மீண்டும் குளத்தை தூர்வாரி, சீமைக் கருவேல மரங்களை அகற்றி வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.
அப்போது, சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு நீர் ஆதாரம் கிடைப்பதோடு, குற்றச் செயல்களும் குறையும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT