Published : 31 Aug 2015 09:41 AM
Last Updated : 31 Aug 2015 09:41 AM
எகிப்து நாட்டு வெங்காயம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து வெங்காய விலை குறையத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக வெங்காய விலை கிலோ ரூ.50-ஐ தாண்டி ரூ.100 வரை கூட விற்கப்பட்டது. டெல்லியில் வெங்காய விலையை கட்டுக்குள் வைக்க டெல்லி அரசே ரூ.40-க்கு அடக்க விலை விற்பனையைத் தொடங்கியது.
சென்னையில் கடந்த வாரம் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் ரூ.70, சில்லறை விற்பனையில் ரூ.80, ஜாம்பஜார் போன்ற சில்லறை மார்க்கெட்களில் தரத்துக்கேற்ப ரூ.100 என விலை உயர்ந்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் கடந்த சில தினங்களாக வெங்காய விலை திடீரென குறையத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் கிலோ ரூ.40, சில்லறை விற்பனையில் ரூ.60, ஜாம்பஜாரில் ரூ.60 ஆக குறைந்துள்ளது. திடீர் விலை குறைவுக்கு எகிப்து நாட்டு வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்திருப்பதுதான் காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் வெங்காய வியாபாரிகள் கூறியதாவது:
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வெங்காயத்தை விநியோகம் செய்யும் மிகப்பெரிய சந்தையாக மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள லாஸல்கான் விளங்குகிறது. அங்குள்ள வெங்காய வியாபாரிகள் எகிப்து நாட்டிலிருந்து 90 டன் வெங்காயத்தை கடந்த வாரம் இறக்குமதி செய்தனர். அதில் 20 டன் வெங்காயம் கடந்த வியாழக்கிழமை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
முன்பு பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வெங்காயம், போதிய வரவேற்பை பெறவில்லை. அதனால் எகிப்து நாட்டு வெங்காயத்தை பல ஹோட்டல்கள், இல்லங்களுக்கு கொடுத்து சமைக்கச் சொன்னோம். அனைவருக்கும் திருப்தி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் எகிப்திலிருந்து 500 டன் வெங்காயம் தற்போது மும்பை துறைமுகத்தை வந்தடைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அங்கிருந்து தினந்தோறும் 20 டன் வெங்காயத்தை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம். அடுத்த லோடு ஒரு சில தினங்களில் கோயம்பேடு வரும்.
எகிப்து நாட்டு வெங்காயத்தை, லாஸல்கான் வெங்காயத்தை விட ரூ.10 வரை குறைவான விலையில் விற்க முடியும். லாஸல்கான் வெங்காயம் அதிகபட்சமாக 50 மில்லி மீட்டர் விட்டம் கொண்டவை. எகிப்து நாட்டு வெங்காயம் 60 மில்லி மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டதாக பெரிய அளவில் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT