Published : 29 Nov 2019 10:33 AM
Last Updated : 29 Nov 2019 10:33 AM
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழையால் பாபநாசம் அணை நிரம்பியிருக்கும் நிலையில், அதிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்துவரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள் ளது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்றுமுன்தினம் 142.35 அடியாக இருந்தது. நேற்று காலையில் நீர்மட்டம் 142.60 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1,754 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அகத்தியர் அருவியில் வெள்ளம் கரைபுரண்டது. ஏற்கெனவே அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி யாரும் செல்லாத வகையில் வனத்துறையினர் சாலையில் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பாபநாசம் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப் பட்டுள்ளதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது. கரை யோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. ஆற்றங்கரையிலுள்ள படித்துறைகளில், குளிக்கவோ, துணிதுவைக்கவோ வேண்டாம் என்று வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கால்வாய்களில் அதிக நீர்
தொடர் மழையால் தாமிரபரணி பாசன கால்வாய்களிலும் அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப் பட்டிருக்கிறது. அதன்படி கன்னடியன் கால்வாயில் விநாடிக்கு 1,750 கனஅடியும், கோடகன் கால்வாயில் 3,444 கனஅடியும், பாளையங்கால்வாயில் 2,900 கனஅடியும், திருநெல்வேலி கால்வாயில் 1,440 கனஅடியும், மருதூர் கீழக்காலில் 400, மருதூர் ஆற்றில் 851 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திலுள்ள அணைகள் மற்றும் பிற இடங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை யளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 22, சேர்வலாறு-24, மணிமுத்தாறு- 7.8, கொடு முடியாறு- 5, கடனா- 7, ராமநதி- 12, அம்பாசமுத்திரம்- 12, சேரன்மகாதேவி- 1, நாங்குநேரி- 1, பாளையங்கோட்டை- 1.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT