Published : 29 Nov 2019 10:23 AM
Last Updated : 29 Nov 2019 10:23 AM

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக துப்புரவுப் பணியிடங்களுக்கு நேர்காணல்: பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்பு; ‘எந்த தொழிலிலும் பாகுபாடு கிடையாது’

கோவை 

துப்புரவுப் பணியாளர் பணியிடங்க ளுக்கு, 2-வது நாளாக நேற்று நடந்த கலந்தாய்வில் ஏராளமான பட்டதாரி இளைஞர், இளம் பெண்கள் கலந்துகொண்டனர்.

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 துப்புரவுப் பணியாளர் கிரேடு -1 பிரிவுக்கு, தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்காக விண்ணப்பிக்க உரிய காலக்கெடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து படித்தவர்கள், படிக்காதவர்கள், பட்டதாரிகள், ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் என 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த 27-ம் தேதி முதல் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்து வருகிறது. முதல் நாளில் ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். இதில் சிலர் வரவில்லை. வந்தவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

முதல் நாள் நடந்த நிகழ்வில் 8-ம் வகுப்பு படித்தவர்கள், 10-ம் வகுப்பு படித்தவர்கள், பிளஸ் 2 படித்தவர்கள் மட்டுமின்றி, பிஇ, பிஏ, எம்.ஏ, எம்.காம். உள்ளிட்ட இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்களும் வந்திருந்தனர். 2-வது நாளாக நேற்று நடந்த நேர்காணலில், 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதல் நாளில் 10 அதிகாரிகள் கொண்ட குழுவினர், ஆவணங்களை சரிபார்த்தனர். இதனால், சான்றிதழ் சரிபார்ப்பில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து, 2-வது நாளாக நேற்று கூடுதலாக 10 பேர் என மொத்தம் 20 அதிகாரிகள் கொண்ட குழுவினர், நேர்காணலுக்கு வந்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர். ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள், பட்டதாரி இளைஞர்கள், இளம் பெண்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

நேர்காணலுக்கு வந்திருந்த போத்தனூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த சவுமியா (21) கூறும்போது, ‘‘பி.எஸ்சி. முடித்துள்ளேன். மாநகராட்சியின் அறிவிப்பை பார்த்து விண்ணப்பித்தேன். எந்த தொழிலும் பாகுபாடு கிடையாது. ஆர்வத்துடன் இப்பணிக்கு விண்ணப்பித்துள்ளேன்’’ என்றார்.

எந்த தொழிலும் தாழ்வானது கிடையாது. குப்பை சேகரிப்பில் முன்பு இருந்த நிலையைவிட, தற்போது நிறைய தொழில்நுட்ப வசதிகள் வந்துள்ளன.

இதைப் பயன்படுத்தி, எளிதில் குப்பையை தரம் பிரித்து சேகரிக்க முடியும். மேலும், இது நிரந்தர அரசுப் பணி. தடையற்ற ஊதியம் உள்ளிட்ட காரணங்களால், ஆர்வத்துடன் விண்ணப்பித்தோம் என்று இளைஞர்கள் தெரிவித்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, ‘‘முதல் நாளை காட்டிலும் 2-வது நாளான நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி விரைவாக நடத்தப்பட்டது. இன்று 3-வது நாள் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. முழு நேர்காணலும் நடத்தப்பட்ட பின்னர், தேர்வானவர்களின் விவரம் அறிவிக்கப்படும்’’ என்றனர்.

மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘கடந்த இரு நாட்கள் வர இயலாதவர்கள், இன்று (நவ.29) மதியம் 2 மணிக்கு நடக்கும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x