Published : 29 Nov 2019 10:19 AM
Last Updated : 29 Nov 2019 10:19 AM
இலங்கை வாழ் தமிழர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என, இலங்கை அதிபரிடம் இந்திய பிரதமர் வலியுறுத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (நவ.29) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் இந்திய பிரதமர் இலங்கையில் வாழும் சிங்களர்களுக்கு உள்ளது போல தமிழர்களுக்கும் மற்ற சிறுபான்மை மக்களுக்கும் ஒரே மாதிரியான சலுகைகள், உரிமைகள், பாதுகாப்புகள் கிடைக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு கூற வேண்டும்.
இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மட்டுமல்ல சகோதரத்துவத்துடன் பழகும் நாடுகள். எனவே இந்திய பிரதமர் இலங்கை அதிபரிடம் பேசும் போது இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் வாழும் சில பகுதியில் உள்ள ராணுவத்தை உடனடியாக விளக்கிக்கொள்ள வலியுறுத்த வேண்டும்.
மேலும் சிங்களர்களும் தமிழர்களும் மற்ற சிறுபான்மை மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இலங்கை அரசு இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை வகுத்து திட்டங்களின் பயன் அனைவருக்கும் சமமாக சென்றடைய வேண்டும். ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
ஈழத்தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இலங்கையில் கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் இனிமேலும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இலங்கை சிறையில் வாடும் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.
ஈழத்தமிழர்களின் குடும்பங்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு 18-வது அரசியல் சட்டத்திருத்தத்தின்படியும், கூடுதலாகவும் அரசியல் அதிகாரங்கள் முழுமையாக கிடைக்க வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு இனிமேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டும். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஒப்படைக்கவோ அல்லது படகுகளுக்கு உரிய இழப்பீட்டையோ வழங்க வேண்டும்.
கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிப்பதற்கு தடை ஏதும் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித் தொழில் செய்யும் போது பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க மீனவர்களிடையே ஒத்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை பிரதமர் இலங்கை அதிபரிடம் வைத்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டும்.
அதாவது இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கின்ற சிங்களர்களும் சிறுபான்மையாக இருக்கின்ற தமிழர்கள் உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினரும் ஒற்றுமையாக ஏற்றத்தாழ்வில்லாமல் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு இருக்கிறது என்பதால் இந்திய பிரதமர் இலங்கை அதிபரிடம் இலங்கை வாழ் தமிழர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காக உறுதியோடு பேச வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT