Published : 21 Aug 2015 08:31 AM
Last Updated : 21 Aug 2015 08:31 AM
சென்னை நந்தனத்தில் உள்ள சேமியர்ஸ் சாலை அருகே ரூ.150 கோடி செலவில் ‘மெட்ரோ பவன்’ அமைக்கும் பணி அடுத்த மாதத்தில் தொடங்கவுள்ளது.
சென்னையில் இரு வழித்தடங்களில் 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் 29-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. எஞ்சியுள்ள வழித்தடங்களில் பணிகளை முடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் இயக்க தலைமை அலுவலகமாக ‘மெட்ரோ பவன்’ அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
அதிகாரி தகவல்
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளில் உயர்த்தப்பட்ட வழித்தடங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகளில் 90 சதவீதமும், நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில் 75 சதவீதமும், பணிமனை கட்டுமானத்தில் 70 சதவீதமும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும், ஏற்கனவே திட்டமிட்டபடி நந்தனத்தில் சேமியர்ஸ் சாலை அருகே ரூ.150 கோடி செலவில் ‘மெட்ரோ பவன்’ அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
10 ஏக்கர் பரப்பில்..
10 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகம் அமைகிறது. முதல்கட்டமாக 5 அடுக்கு மாடியாக அமைக்கவுள்ளோம். மெட்ரோ ரயில் இயக்ககம் மற்றும் தலைமை நிர்வாக அலுவலகமாக இது இருக்கும். நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர்களுக்கு தனியாக அலுவலகங்கள் அமைக் கப்படும். இதுதவிர, மெட்ரோ ரயில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான குடியிருப்பு கள் அமைக்கப்படும்.
ஏற்கனவே அடித்தளம் அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டன. இந்நிலையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் வெளியிடப்பட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் இறுதி பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதத்தில் கட்டுமானப் பணிகளை தொடங்க வுள்ளோம். 2017-ம் ஆண்டு இறுதியில் பணிகளை முடிக்கவுள் ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT