Published : 28 Nov 2019 04:04 PM
Last Updated : 28 Nov 2019 04:04 PM

கைக்குழந்தையை தோளில் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் நாள் முழுவதும் உணவு டெலிவரி:  உற்சாக உபெர் பெண்மணி

தனது வாழ்க்கை வருமானத்திற்காக பால்குடி மாறாத கைக்குழந்தையை தோளில் கட்டிக்கொண்டு நாள் முழுவதும் சென்னையில் சுற்றி வந்து உணவு டெலிவரி செய்கிறார் ஒரு பெண்.

சென்னையில் உபெர், ஸ்விக்கி, ஜோமேட்டோ போன்ற பல தனியார் நிறுவனங்கள் ஹோட்டல்களிலிருந்து நேரடியாக வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்யும் பணிகளைச் செய்து வருகிறது. வீட்டுக்கு அருகாமையில் உள்ள உணவகங்களிலிருந்து ஆரடர் கொடுக்கப்படும் உணவுகளை வாடிக்கையாளரின், வீடு, நிறுவனங்களுக்குச் சென்று அளிக்கும் பணியில் சென்னையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

இதில் பெண்கள் ஈடுபடுவது மிகவும் குறைவு. காரணம் வாகனம் ஓட்டுவது, வாடிக்கையாளர்களில் சிலர் முரட்டுத்தனமாக இருப்பார்கள், பாதுகாப்பு காரணங்களும் உண்டு. இதையெல்லாம் மீறி வேலை செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால் கைக்குழந்தையுடன் உணவு விநியோகிக்க சாலையில் ஒரு பெண் நிற்பதை வாகன ஓட்டிகள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். சிலர் பாராட்டவும் செய்கின்றனர்.

சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர் வள்ளி (37). இவரது கணவர் தினகரன் (39). இவர் தனியார் ஏடிஎம்மில் செக்யூரிட்டியாக உள்ளார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் தாமதமாகத்தான் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஒண்ணே கால் வயதில் (15 மாதங்கள்) ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடன், குடும்ப வருமானம், வாழ்க்கை சூழ்நிலைக்காக வள்ளி தானும் ஏதாவது தொழில் செய்து குடும்பத்துக்கு வருமானம் சேர்க்க எண்ணினார். உபெர் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பெண்ணாக இன்று பணியாற்றுகிறார். கைக்குழந்தையுடன் அவர் சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்வதைக் கண்ட வாகன ஓட்டி ஒருவர் படம் எடுத்து ட்விட்டரில் போட அவர் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார்.

'இந்து தமிழ் திசை'க்காக அவரது அனுபவத்தைக் கேட்டபோது அவர் கூறியதாவது:

உங்களைப் பற்றிச் சொல்லுங்க?

என் தாய் வீட்டு வேலை செய்பவர், தந்தை கூலி வேலை செய்பவர். ஏழ்மையான குடும்பம். பிஎஸ்சி சைக்காலஜி முடித்துள்ளேன். எனக்கு தாமதமாகத்தான் திருமணம் நடந்தது. 2 ஆண்டுக்கு முன் 35 வயதில் திருமணம் நடந்தது. கணவர் தனியார் ஏடிஎம்மில் காவலாளியாக உள்ளார். சொற்ப வருமானம்தான். எங்களுக்கு ஒரே மகன் சாய் கிஷோர். ஒண்ணே கால் வயது ஆகிறது.

ஏன் உபெரில் சேரணும்னு தோணுச்சு?

கடன் பிரச்சினை. வருமானமும் குறைவு. ஏதாவது தொழில் செய்யலாம் என்று நினைத்தேன். அப்போதுதான் உணவு டெலிவரி செய்யும் தொழிலில் ஈடுபடலாம் என்று தோன்றியது. நான் 7 ஆண்டுகளுக்கும் மேல் இரு சக்கர வாகனம் ஓட்டி வருகிறேன். என்னிடம் டிவிஎஸ் எக்ஸ் எல் உண்டு. அதனால் இந்த வேலையைத் தேர்வு செய்தேன்.

உங்களுக்கு எளிதாக வேலை கிடைத்ததா? குழந்தை இருப்பதால் யோசித்திருப்பார்களே?

இல்லை சார். நான் பல கம்பெனியை பார்த்தேன். உபெர் எனக்குச் சரியாகப் பட்டது. இன்டர்வியூ போனபோது அவர்கள், பாப்பாவை வைத்துக்கொண்டு உங்களால் வேலை செய்ய முடியுமா என்று கேட்டார்கள். கண்டிப்பாக என்னால் முடியும் என்றேன். என்னை மிகவும் பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். தைரியப்படுத்தினார்கள். வேலை கொடுத்தார்கள்.

எவ்வளவு நாட்களாக வேலை செய்கிறீர்கள்? வருமானம் பரவாயில்லையா?

கடந்த ஒருமாதமாகச் செல்கிறேன். மதியம் 12 மணியிலிருந்து இரவு 9 மணிவரை பணியாற்றுவேன். வருமானம் பரவாயில்லை. டெலிவரி பொறுத்து வருகிறது.

குழந்தையை யாரிடமும் விட்டுச் செல்ல முடியாதா?

யாரும் இல்லை. அதனால்தான் நானே அவனை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். முன்னாடி அமரவைத்து என்னுடன் சேர்த்துக் கட்டிக்கொள்வேன். நாள் முழுவதும் அவன் என்னுடன்தான் பயணம் செய்வான்.

ஒரு மாதத்தில் உங்களுக்குக் கிடைத்த அனுபவம்?

அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு சார். வாடிக்கையாளர்கள் குழந்தையுடன் நான் செல்லும்போது பரிவுடன் என்னைப் பார்ப்பார்கள். முதலில் என் குழந்தையைக் கொஞ்சிவிட்டுத்தான் பின்னர் உணவையே வாங்குவார்கள்.

சாலையில் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள், சக வாகன ஓட்டுநர்கள் என்னை மிகவும் பாராட்டி உற்சாகமூட்டுகிறார்கள். உங்களைப் பார்க்கும்போது எங்களுக்கு உற்சாகம் வருது என்று சொல்வார்கள். ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்னை மிகவும் பாராட்டினார். நீதாம்மா சிங்கப் பெண் என்றார். எனக்காக சாலையில் செல்பவர்கள் கூட அட்ஜஸ்ட் செய்யும்போது மனித நேயத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களை நெகிழ வைத்த சம்பவம்?

கண்டிப்பாக இருக்கு சார். சாலையில் என்னைப் பார்த்த ஒரு பெண் கட்டிப்பிடித்துக் கொண்டார். என் குழந்தையைக் கொஞ்சிய அவர், நான் என் வாழ்க்கையில் உள்ள பிரச்சினையை நினைத்து ஏண்டா வாழ்கிறோம்னு வந்துகிட்டிருந்தேன். பிஞ்சுக் குழந்தையை வெச்சுக்கிட்டு இப்படி உழைக்கிறியேம்மா. உன்னைப் பார்க்கும்போது எனக்குத் தனி தைரியம் வருதும்மா. இனி நான் தைரியமா பிரச்சினையை எதிர்கொள்வேன் என்றார். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

நாமும் ஏதோ ஒருவகையில் யாருக்காவது வாழ்க்கையில் தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருக்கிறோமே என்று மேலும் உற்சாகமாகிவிட்டது.

குழந்தை திட உணவு சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டதா? தினமும் பல மணி நேரம் சாலையில் உள்ள மாசுக்களுடன் பயணிக்கும்போது உடல் நிலை பாதிக்காதா?

பாதிக்கத்தான் சார் செய்யும், நான் முன்னேற்பாடாக தலையில் குல்லா, ஸ்வெட்டர் எல்லாம் போட்டு அழைத்துச் செல்கிறேன். என்னைப் பார்த்தப்படி முகத்தை வைத்துக் கட்டிக்கொள்வேன். அதனால் நேரடியாக காற்றைச் சந்திக்கும் நிலை வராது. இருந்தாலும் மழைக்காலங்களில் வெளியே போகமாட்டேன். குழந்தை என்னுடன் இருக்கவேண்டிய நிலை உள்ளது என்ன செய்வது சற்று சிரமம்தான்.

குழந்தையை எப்படிப் பராமரிக்கிறீர்கள். வழியில் தூங்கிவிடுவான், உணவு கொடுக்கணும் என பல பிரச்சினைகள் உள்ளதே?

மதியம் 12 மணிக்குக் கிளம்பும்போதே சாப்பாடு, ஸ்நாக்ஸ் அனைத்தையும் எடுத்துச் செல்வேன். தூங்கிவிட்டால் சற்று இறுக்கி கட்டிக்கொள்வேன்.

உங்களுக்கு என்ன வகையான உதவியை எதிர்பார்க்கிறீர்கள்?

என் குழந்தையை நல்லபடியாக படிக்க வைக்கணும். கொஞ்சம் கடன் பிரச்சினை உள்ளது. அதை அடைக்கணும். என்னிடம் உள்ள டிவிஎஸ் 50 எக்ஸ் எல் பழைய வாகனமாக உள்ளது. ஆக்டிவா வாகனம் இருந்தால் நன்றாக இருக்கும். அரசு இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் வாங்க வயது தடையாக இருக்கு. அரசு விதியைத் தளர்த்தி எனக்கு வாகனம் வழங்கினால் நன்றியுடையவளாக இருப்பேன். வாகனம் வாங்குவதற்கு உதவி செய்தால் அது எனக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் கணவர் இதை எப்படிப் பார்க்கிறார்?

அவர் இதை அனுமதித்துவிட்டார். ஆனால் தினமும் கைக்குழந்தையுடன் சாலையில் போக்குவரத்தில் நான் செல்வதால், இருவர் பாதுகாப்பையும் எண்ணி கவலைப்படுகிறார்.

உங்களுக்கு இந்த வேலை கஷ்டமாகத் தெரியவில்லையா?

இருக்கு சார். ஆனால் என் குழந்தையை நல்லபடியாக வளர்த்து படிக்க வைக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அவன் என்னுடனே தினமும் பயணிப்பதால் மனச்சோர்வு சட்டென்று பறந்துவிடுகிறது.

தனது இக்கட்டான நிலையையும் தகர்த்துப் பணியாற்றும் வள்ளி போன்ற பெண்கள், ஆட்டோ ஓட்டுநர் சொன்னதுபோல் சிங்கப் பெண்கள்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x