Published : 28 Nov 2019 01:29 PM
Last Updated : 28 Nov 2019 01:29 PM

திருப்பத்தூர் மாவட்டக் கோரிக்கையை திமுக கிடப்பில் போட்டது: ஓபிஎஸ் பேச்சு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம்

திருப்பத்தூர்

225 ஆண்டுகளுக்கு முன்பாகவே மாவட்டமாக திருப்பத்தூர் இருந்திருக்கிறது என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று (நவ.28) நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

"திருப்பத்தூர் மாவட்ட மக்கள், இதுநாள் வரை தங்களது தேவைகளுக்கு 91 கி.மீ.க்கு அப்பால் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கோ, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கோ சென்று வர வேண்டியிருந்தது. இன்று முதல் அந்த நிலை மாறிவிட்டது. அம்மாவட்ட மக்கள் சந்தித்த இன்னல்களைப் போக்கும் விதத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இனி மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க சுமார் ஒன்றரை மணிநேரம் பயணம் செய்து வேலூருக்குச் செல்ல வேண்டியதில்லை. குறுகிய நேரத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று மக்கள் தங்கள் பணிகளை முடித்துக்கொள்ள முடியும்.

திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. 1988-ம் ஆண்டில் தமிழகத்தின் பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட இருந்த நேரத்தில், திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு மற்றொரு மாவட்டமும் உருவாக்க மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கை மனு வடிவமாக மட்டுமல்லாமல், போராட்ட வடிவமாகவும் அமைந்திருந்தது.

ஆனால், 1989-ம் ஆண்டில் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக அரசு, திருவண்ணாமலை மாவட்டத்தை மட்டும் உருவாக்கி விட்டு, திருப்பத்தூர் மாவட்டக் கோரிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். அன்று முதல், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாற்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர் பகுதி மக்கள் தனி மாவட்டம் கேட்டு போராடி வந்தனர்.

2016-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, புதிய மாவட்டம் தொடங்கிட ஜெயலலிதா உறுதி தந்தார். அந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கடந்த 225 ஆண்டுகளுக்கு முன்பாகவே மாவட்டமாக இருந்திருக்கிறது என்பது வரலாறு. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் 1790 ஆம் ஆண்டில் திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது என்றும், இந்தியாவின் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இங்குதான் அமைந்திருந்தது என்றும் வரலாறு கூறுகிறது. பின், 1792-க்குப் பின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் தலைநகராகவும் திருப்பத்தூர் இருந்ததாக அறியப்படுகிறது".

இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x