Published : 28 Nov 2019 07:29 AM
Last Updated : 28 Nov 2019 07:29 AM
மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மும்பை செல்கிறார்.
முன்னதாக மகாராஷ்டிரமுதல்வராக பொறுப்பேற்கவுள்ள சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து ‘மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணி’ என்ற பெயரில் ஆட்சி அமைத்துள்ளன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே, ‘மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணி’ உருவாக காரணமான சரத்பவார் ஆகியோரை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். உத்தவ் தாக்கரேவிடம் பேசிய ஸ்டாலின், "மாநிலக் கட்சியின் தலைவர் ஒருவர் முதல்வராவது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்ப்பட்ட தடைகளை எல்லாம் உடைத்து வெற்றி பெற்றுள்ளீர்கள். தமிழகம் - மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவீர்
கள் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
சரத்பவாரிடம் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின், "மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சியை அமைத்ததற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எதிர்க்கட்சியினரின் ஒற்றுமைக்கு அடையாளமாக நீங்கள் திகழ்கிறீர்கள். ஜனநாயகம் துடிப்பாக இயங்கவும், அரசியலமைப்புச் சட்டமும் நாடும் வலிமையாக இருக்கவும் இந்த ஒற்றுமை தொடர வேண்
டும்" என்று கூறியதாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அழைப்பு
உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று, விழாவில் பங்கேற்பதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் மும்பை செல்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT