Published : 27 Nov 2019 09:30 PM
Last Updated : 27 Nov 2019 09:30 PM

கிண்டி காவல் நிலையத்தில் காணாமல் போன காவலரின் பைக்: போதையில் திருடிய தனியார் வங்கி மேலாளர் கைது

கிண்டி காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது மது போதையில் வாகனம் ஓட்டி சிக்கிய தனியார் வங்கி மேலாளர், தனது மோட்டார் சைக்கிள் என நினைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.

ஆலந்தூரைச் சேர்ந்தவர் அருண்குமார் (28). பரங்கிமலை ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றுகிறார். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த வாரம் கிண்டி காவல் நிலையத்தில் பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட தனது பல்சர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேருந்து ஏறி ஊருக்குச் சென்றுவிட்டார். பைக் நிறுத்திவிட்டுச் செல்லும் விஷயத்தை ஸ்டேஷனில் உள்ளவர்களிடம் சொல்லவில்லை.

இந்நிலையில் நேற்று அதிகாலை வெளியூரிலிருந்து கிண்டிக்கு வந்து இறங்கிய அருண்குமார், தனது பல்சர் மோட்டார் சைக்கிளை எடுக்க கிண்டி காவல் நிலையம் வந்தார். ஆனால் அவர் நிறுத்திய இடத்தில் மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. ஸ்டேஷன் முழுவதும் தேடியும் கிடைக்காததால் அதே ஸ்டேஷனில் குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்ற போலீஸார், ஸ்டேஷனில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது தள்ளாடியபடி வந்த டிப் டாப் உடையணிந்த நபர் ஒருவர் ஸ்டேஷனுக்குள் வருவதும், பின்னர் அருண்குமாரின் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வதும் பதிவாகியிருந்தது. அவர் யார் என ஸ்டேஷனில் உள்ளவர்களை விசாரித்தபோது தெரியவில்லை.

பின்னர் அந்த சிசிடிவியை போலீஸார் ஆராய்ந்தபோது, அந்த நபர் கையில் போலீஸ் ரசீது ஒன்றுடன் வருவதைப் பார்த்துள்ளனர். அது போக்குவரத்து போலீஸார் கொடுக்கும் ரசீதுபோல இருக்கவே போக்குவரத்து போலீஸாரை அழைத்து விவரம் கேட்டுள்ளனர்.

அதில் ஒருவர், ''அந்த நபர் நேற்று முன் தினம் இரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதில் சிக்கினார். ஏதோ தனியார் வங்கியில் மேனேஜராக இருக்கிறேன் என்று சொன்னார். பல்சர் மோட்டார் சைக்கிள் வாகனத்தையும், லைசென்ஸ் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துவிட்டு அபராதம் கட்டிவிட்டு வந்து வண்டியை வாங்கிக் கொள்ளச்சொல்லி அனுப்பி விட்டோம்'' என்று கூறினார். அப்போதுதான் அந்த நபர் காவலர் அருண்குமாரின் பைக்கை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் அவரின் லைசென்ஸில் உள்ள முகவரியைப் பார்த்தபோது அருண்ராஜ் (27), புது பெருங்களத்தூர் என்று இருந்தது. உடனடியாக போலீஸார் அங்கு விரைந்தனர். வீட்டில் அருண்ராஜ் இருந்துள்ளார்.

போலீஸார் அவரைப் பிடித்து, “மோட்டார் சைக்கிள் எங்கே?” என்று கேட்டபோது ''எந்த வண்டி?” என்று கேட்டுள்ளார். “கிண்டி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து திருடிக்கொண்டு வந்தாயே அந்த வண்டி” என்று போலீஸார் சொல்ல, “சார் ஒழுங்கா பேசுங்க. என் வண்டி இன்னும் ஸ்டேஷனில்தான் நிற்குது” என்று கூறியுள்ளார். ”அப்படியா இப்ப இன்னொரு வண்டிய எடுத்துட்டு வந்தாயே. அது எங்க சொல்லு” என்று போலீஸார் சிசிடிவி காட்சியைக் காட்டி கேட்க, அப்போதுதான் அவர் இறங்கி வந்துள்ளார்.

சார் எல்லா விஷயத்தையும் சொல்லி விடுகிறேன் என்று நடந்த அனைத்து விஷயங்களையும் கடகடவென்று தெரிவித்துள்ளார்.

“சார் 25-ம் தேதி இரவு என் பல்சரில் மது போதையில் வீட்டுக்குப் போகும்போது கிண்டி போலீஸார் பிடித்தார்கள். வண்டியைப் பறிமுதல் செய்துவிட்டு கேஸ் போட்டு அபராதம் கட்டிட்டு வண்டிய எடுத்துட்டு போன்னு சொல்லிட்டாங்க.

வண்டி இல்லாமல் போனால் அம்மா திட்டுவாங்க, அதனால் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தேன், அதிகாலையில் ஸ்டேஷன் பக்கம் போனேன். பார்த்தால் என் வண்டி அங்கே தனியாக நின்று கொண்டிருந்தது. போதை தெளிந்தும் தெளியாத நிலையில் வண்டியை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போனேன்.

அப்ப ஒரு பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்துவிட்டேன். மறுபடியும் வண்டியை எடுத்தால் வண்டியின் முன்பக்க போர்க் பெண்டாகி ஓட்ட முடியவில்லை. காலையில் என் நண்பர் மெக்கானிக்கிடம் வண்டியை விட்டேன். அவர் வண்டியைப் பார்த்துவிட்டு, ''இது யார் வண்டி. பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் இருக்கே என்று கேட்டார். அப்பத்தான் வண்டியையே பார்த்தேன். என் வண்டி இல்லை. போதையில் யாருடைய வண்டியையோ எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்'' என்று புரிந்தது.

நண்பர் வண்டி என்று சொல்லி சமாளித்து, வண்டியை ரெடி பண்ணினேன். சரி இதே நம்பருடன் வண்டியை வீட்டுக்குக் கொண்டு சென்றால் அம்மா கண்டுபிடித்து திட்டிவிடுவார் என்று பயந்து என் வண்டியின் எண் கொண்ட நம்பர் பிளேட்டைத் தயார் செய்து மாட்டினேன். பின்னர் இந்த வண்டியைக் கையில் வைத்திருந்தால் சிக்கல் ஆகிவிடும் என்று தாம்பரம் ரயில் நிலைய ஸ்டாண்டில் நிறுத்தி வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

அருண்ராஜ் சொன்ன கதையைக் கேட்டு சிரித்த போலீஸார் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது தப்பு, வாகனத்தைப் பறிமுதல் செய்த பின்னர் அபராதம் செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்லாமல் ஸ்டேஷனுக்குள் நுழைந்து வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளாய், அதுவும் வேறொருவர் பைக் அது. பின்னர் நம்பர் பிளேட்டையும் மாற்றி ஸ்டாண்டில் நிறுத்தி வைத்துள்ளாய்.

எத்தனை குற்றங்கள் செய்துள்ளாய்? தப்பு மேல் தப்பு செய்துள்ளாய் என்று தெரிவித்து மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்து, மேற்கண்ட குற்றங்களுக்காக அருண்ராஜைக் கைது செய்தனர். மெக்கானிக்கை அழைத்து விசாரித்தனர். அவர் மீது தவறில்லை என்றவுடன் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x