Published : 14 Aug 2015 05:48 AM
Last Updated : 14 Aug 2015 05:48 AM
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலின் சுவர்களில் தீட்டப் பட்டுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை புதுப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியின்போது, சிதைந்த ஓவியங் களுக்கு பின்னால் அதற்கும் முற்பட்ட காலத்து ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அவற்றை ஆய்வு செய்ய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மூலவர் சன்னதியின் சுற்று சுவரில், பழமையான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. தசாவதாரங்கள், பள்ளிகொண்ட பெருமாள், 108 திவ்யதேசங்கள், கிருஷ்ண லீலை உட்பட திருமாலின் பெருமைகளை விளக்கும் ஓவியங் கள் காணப்படுகின்றன. இவை மூலிகை இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட வண்ணங்களால், கி.பி.1569-ம் ஆண்டு தீட்டப் பட்டதாக தொல்லியல் ஆய்வா ளர்கள் கருதுகின்றனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த ஓவியங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன. எனவே, இந்த ஓவியங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணி, தொல்லியல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வடிவமைப்பாளர் சம்பத்குமார் தலைமையிலான குழுவினர் புதுப்பிப்புப் பணியை நேற்று தொடங்கினர்.
இந்த ஓவியங்களை தொல்லி யல் துறையினர் ஆய்வுசெய்த போது, ஓவியங்களுக்கு பின்னால், அதற்கும் முற்பட்ட காலத்தில் வரையப்பட்ட மிகப்பழமையான மூலிகை ஓவியங்கள் அமைந் திருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம், கடந்த காலத்தில், ஓவியங்கள் மீதே ஓவியங்கள் தீட்டப்பட்டது உறுதியானது. இதுகுறித்து ஆய்வு நடத்த அறநிலையத்துறை உத்தர விட்டுள்ளது.
இதுகுறித்து, அறநிலையத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: சிதைந்துள்ள மூலிகை ஓவியங் களின் பின்னால், மற்றொரு பழமையான மூலிகை ஓவியம் இருப்பது தெரியவந்தது. இந்த ஓவியங்கள் 10-ம் நூற்றாண்டு அல்லது அதற்கும் முற்பட்ட காலத்து ஓவியங்களாக இருக் கலாம் என கருதுகிறோம் ஓவியத்தின் பின்னால் மறைந் துள்ள ஓவியங்கள், படையெடுப் பினால் மறைக்கப்பட்டிருக்காலம்.
புதிய மன்னர்கள் தங்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் புதுப்பித்திருக்கலாம் அல்லது பழைய ஓவியங்களை புதுப்பிப்பதற்கு பதிலாக அதை மறைத்து புதிய ஓவியங்களை வரைந்திருக்கலாம். எனினும், ஆய்வுக்கு பின்னரே சரியான விவரங்கள் தெரியவரும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து, தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற வடிவமைப் பாளர் சம்பத்குமார் கூறியதாவது: மூலிகை ஓவியங்கள், காலப் போக்கில் அழுக்கு படிந்து மறைந்துள்ளன. சில இடங் களில் சிதைந்துள்ளன. கனிம வேதிபொருட்களின் மூலம் தயாரிக்கப்பட்ட இரசாயன பூச்சுகளை கொண்டு, ஓவியங் களின் மீது படிந்துள்ள தூசுகளை அகற்றி புதுப்பொலிவு ஏற்படுத்தும் பணிகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட உள்ளன. சுமார் 1,800 சதுர மீட்டர் நீளம் கொண்ட இந்த ஓவியங்களை புதுப்பிக்கும் பணி 2 ஆண்டுகள் நடைபெறும்.
ஓவியத்தின் பின்னால், அதற்கும் முந்தைய காலத்து ஓவியம் இருப்பதால், அதை ஆய்வு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படும். ஓவியங்களை புதுப்பிக்கும் பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதால், வேதியியலில் இளங்கலை பயின்ற ஆர்வமுள்ள நபர்கள் அணுகலாம். அவர்களுக்கு இலவசமாக பயிற்சியும் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT