Last Updated : 02 May, 2014 08:28 AM

 

Published : 02 May 2014 08:28 AM
Last Updated : 02 May 2014 08:28 AM

திமுக எம்.பி. செல்வகணபதி பதவி பறிப்பு

சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட டி.எம்.செல்வகணபதியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் மாநிலங் களவை தலைமையகத்தின் தலைமைச் செயலர் சம்ஷேர் கே.ஷெரீப் புதன்கிழமை மாலை இதற்கான உத்தரவை வெளியிட்டார்.

“கடந்த ஏப்ரல் 19-ம் தேதி சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றம் சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் செல்வ கணபதிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 8-ன்படி செல்வகணபதி உடனடியாக எம்.பி. பதவியை இழக்கிறார். தண்டனை முடிந்து விடுதலையான நாளில் இருந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது” என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

செல்வகணபதி பதவி இழந்த ஏப்ரல் 19-ம் தேதியில் இருந்து அவரது மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் காலியாகி விட்டதாகவும் தலைமைச் செயலர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 ஜூன் 30-ல் திமுக சார்பில் மாநிலங்களவைக்கு செல்வகணபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் 2016 ஜூன் 29 வரை உள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவால் அவர் பதவி இழந்துள்ளார்.

சிபிஐ நீதிமன்றம் தண்டனை விதித்த அன்றே செல்வகணபதி தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்கள வைத் தலைவருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி இருந்தார். ஆனால் இந்த ராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை.

இது குறித்து ‘தி இந்து’விடம் மாநிலங்களவை தலைமையக அதிகாரிகள் கூறுகையில், ‘‘தண்டனை அளிக்கப்பட்ட உத்தரவின் நகல் எங்களுக்கு முறைப்படி வந்து அதை நாங்கள் உறுதி செய்த பின்தான் பதவி இழக்கும் அறிவிக்கையை வெளியிட முடியும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உறுப்பினர் செல்வகணபதி தண்டனை அடைந்த மறுநிமிடமே பதவி இழக்கிறார். எனவே இதன்பிறகு அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி எந்த பயனும் இல்லை. இந்த தகவலை அவருக்கு வாய்மொழியாக கூறி விட்டோம்’’ எனத் தெரிவித்தனர்.

இந்த உத்தரவு செல்வகணபதியின் புது டெல்லி முகவரியான சி.203, ஸ்வர்ணஜெயந்தி சதன், பி.டி.மார்க்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் நகல், மத்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தமிழக தலைமை செயலாளர், உச்சநீதிமன்றம் உட்பட 13 பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x