Published : 26 Nov 2019 05:13 PM
Last Updated : 26 Nov 2019 05:13 PM
புகுந்த வீட்டுக்குச் செல்லும் மகளுக்கு சீர்கொடுத்து அனுப்புவது போல, தன்னிடமிருந்து பிரிந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட மக்கள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கொடுத்து அனுப்பியிருப்பதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடக்க விழா இன்று (நவ.26) சாமியார் மடம் மைதானத்தில் நடைபெர்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
"ஒரு தாய், தனது மகளைப் புகுந்த வீட்டுக்கு அனுப்பும்போது, அந்த மகளுடன் தான் வைத்திருந்த நகைகள், பாத்திரங்கள், விலை உயர்ந்த சேலைகள் ஆகியவற்றைக் கொடுத்தனுப்புவது போல, தன்னிடமிருந்து பிரிந்து, தனி மாவட்டமாக உதயமாகும் கள்ளக்குறிச்சிக்கு, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன் மலை, கள்ளக்குறிச்சி ஆகிய வட்டங்களையும், சின்னசேலம், திருக்கோயிலூர், தியாகதுருகம், வடக்கனேந்தல், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய பேரூராட்சிகளையும், கல்வராயன் மலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், திருக்கோவிலூர், திருநாவலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களையும் வழங்கி இன்று முதல் "புதுக்குடித்தனம் தொடங்குங்கள்" என்று மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்திருக்கின்ற மாவட்டம் விழுப்புரம் மாவட்டம்.
அதுமட்டுமல்ல, கோமுகி அணை, மணிமுக்தா அணை, மேகம் நீர்வீழ்ச்சி, பெரியார் நீர்வீழ்ச்சி, கல்வராயன் மலை, தியாகதுருகம் மலை, பழைமை வாய்ந்த பீரங்கி குண்டுகள், ஒகையூர் பெரிய ஏரி, ஆஞ்சநேயர் திருக்கோயில், பழைமை வாய்ந்த சிவாலயம், சித்தலுர் பெரியாயி கோயில் என ஆன்மீகத் தலங்களையும், சுற்றுலாத் தலங்களையும், இயற்கை வளங்களையும் விழுப்புரம் மாவட்ட மக்கள் வழங்கியிருக்கின்றனர்.
மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 46 சதவீதம் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டவையாக அமையும்.
ஆனால், இப்படி எவ்வளவுதான் நல்ல செயல்கள் செய்தாலும், சிறப்பான திட்டங்களை நிறைவேற்றினாலும், எதிர்க்கட்சியினர் அதைச் சிறிது கூட பாராட்டாமல், தமிழக அரசை, குறை சொல்வதையே தங்களின் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், அரசின் மீது தினமும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் மிகவும் திறமை வாய்ந்தவராக இருக்கிறார். ஸ்டாலினுக்கு ஒரே ஒரு ஆசை, எப்படியாவது இருக்கின்ற அரசை குறைக் கூறி எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார். அது எந்தக் காலத்திலும் நடக்காது,
மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காக ஒரே ஒருவருக்கு கோபம். அது யாருக்கென்றால், ஸ்டாலினுக்குத்தான். அவரால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
எங்களிடத்தில் கர்வம் கிடையாது. அடுத்தவரிடம் பறிக்கும் எண்ணமில்லை. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறோம்.
தமிழக வட பகுதியின் சர்க்கரைக் கிண்ணம் என்று சொல்லும் வகையில், கோமுகி சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை, மற்றும் தியாகதுருகம் சர்க்கரை ஆலை என்று, மூன்று ஆலைகளைத் தன்னகத்தே கொண்டு, தமிழ்நாட்டின் சர்க்கரை ஆலை மாவட்டம் என்ற பெருமையுடன், கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாகியிருக்கிறது".
இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT