Published : 26 Nov 2019 02:12 PM
Last Updated : 26 Nov 2019 02:12 PM
காவல்துறை தகவல்கள், கடிதப் பரிமாற்றம், அரசு முத்திரை, பெயர்ப் பலகை, கையொப்பம் என அனைத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழில் அரசு குறிப்பாணை, உத்தரவு, கடிதம் என அனைத்தும் இருக்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோள் ஆகும். ஆனால், நடைமுறையில் மிகவும் குறைவு. தற்போது காவல்துறையில் அரசுத்துறைகள்போலவே பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும்.
இதை மாற்றும் வகையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி நேற்று ஒரு சுற்றறிக்கையை அனைத்து காவல் ஆணையர்கள், டிஜிபிக்கள், ஏடிஜிபிக்கள், மண்டல ஐஜிக்கள், மாவட்ட எஸ்.பி.க்கள், காவல் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினார்.
அதில், ''தமிழ் வளர்ச்சித் துறை இயக்ககம் நவ. 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி ஆட்சிமொழி திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்களைத் தங்கள் இருக்கையில் பராமரிக்கும் தன் பதிவேடு, முன் கொணர்வு பதிவேடு மற்றும் அனைத்துப் பதிவுகளையும் தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும்.
வருகைப் பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இட வேண்டும். அனைத்து வரைவு கடிதத் தொடர்புகளும், குறிப்புகளும் தமிழில் எழுதப்பட வேண்டும். மேலும் அனைத்து காவல் வாகனங்களுக்கும் தமிழில் காவல் என்று இடம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து அலுவலக முத்திரைகளும் மற்றும் பெயர்ப் பலகையும் தமிழில் மாற்றப்பட வேண்டும்” என உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இதுகுறித்து அறிந்த பாமக நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சியுடன் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதிக்கு, ‘காவல்துறையில் இனி தமிழ் தழைக்கட்டும், கனிவு பெருகட்டும்’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் ட்விட்டர் பதிவு:
“தமிழ்நாடு காவல்துறையின் ஆவணங்கள், ஆணைகள், கடிதத் தொடர்புகள், கையெழுத்து உள்ளிட்ட அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது. காவல்துறையில் இனி தமிழ் தழைக்கட்டும்.... கனிவு பெருகட்டும்!”.
தமிழ்நாடு காவல்துறையின் ஆவணங்கள், ஆணைகள், கடிதத் தொடர்புகள், கையெழுத்து உள்ளிட்ட அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது. காவல்துறையில் இனி தமிழ் தழைக்கட்டும்.... கனிவு பெருகட்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) November 26, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT