Published : 25 Nov 2019 07:55 PM
Last Updated : 25 Nov 2019 07:55 PM
திருநெல்வேலி
தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி அதிக பணத்தை செலவிட்டுள்ளதால் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷில்பா பிரபாகர் சதீஷிடம் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ நாராயணன், சுயேட்சை வேட்பாளர்கள் எம். சங்கரசுப்பிரமணியன், பி. பால்முருகன், சி.எம். ராகவன், எஸ். மாரியப்பன், ஏ. திருமுருகன், சுதாகர் பாலாஜி, வி. ராஜீவ் விக்டர் ஆகியோர் இன்று மனு அளித்தனர்.
மனு விவரம்:
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வி. நாராயணன் வெற்றிபெற்றதாக கடந்த மாதம் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரூ.56 லட்சம் செலவிட்டுள்ளதாகவும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ரூ.34 லட்சம் செலவிட்டுள்ளதாகவும், சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடார் ரூ.32 லட்சம் செலவிட்டுள்ளதாகவும் இத் தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர்களால் கணக்கிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு வேட்பாளர் ரூ.28 லட்சம் வரையில் மட்டுமே செலவிட வேண்டும். ஆனால் விதிகளை மீறி முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் செலவினத்தை செய்துள்ளனர்.
இதனால் அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றிபெற்றை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சுயேட்சை வேட்பாளர் சி.எம். ராகவன் கூறியதாவது: தேர்தல் ஆணைய விதிகளை மீறி அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடாரும் செலவிட்டுள்ளனர்.
தேர்தல் செலவின பார்வையாளர்கள் இதை கணக்கிட்டுள்ளனர். எனவே தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும், தேர்தல் செலவின பார்வையாளரிடமும் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுயேட்சை வேட்பாளர் பால்முருகன் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT