Published : 25 Nov 2019 10:00 AM
Last Updated : 25 Nov 2019 10:00 AM
கிருஷ்ணகிரியில் நடந்த தனது சகோதரி மகள் திருமணத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பங்கேற்ற பேரறிவாளன், தனது தாயார் அற்புதம்மாளுடன் பறை இசை இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் தனது தந்தையை உடனிருந்து கவனித்துக் கொள்வதற்காக, கடந்த 12-ம் தேதி ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார். இதையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தாருடன் பேரறிவாளன் தங்கியுள்ளார்.
இந்நிலையில், பேரறிவாளனின் சகோதரி அன்புமணியின் மகள் செவ்வை - கவுதமன் திருமணம் கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்றது. நேற்று காலை 7 மணியளவில் திருமண விழாவில் பங்கேற்க, திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் 20 மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் கிருஷ்ணகிரிக்கு வந்தார்.
திருமணத்தில் பங்கேற்ற அவர், தனது தாயார் அற்புதம்மாளுடன் பறை இசை வாசித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மதியம் 2 மணியளவில் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் தனி வாகனம் மூலம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். திருமண மண்டபத்தில் கியூ பிரிவு, உளவுத்துறை போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT