Published : 24 Nov 2019 11:01 AM
Last Updated : 24 Nov 2019 11:01 AM

விபத்துகளுக்கு காரணமாகும் வகையில் கண்கூசும் முகப்பு விளக்குகளை எரியவிட்டால் அபராதம்: 10 மாதங்களில் 3,275 வாகனங்களுக்கு ரூ.3.27 லட்சம் விதிப்பு

கோவை

விபத்துகளுக்கு காரணமாகும் வகையில், கோவையில் கண்கூசும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற 3,275 வாகனங்களுக்கு, கடந்த 10 மாதங்களில் போக்குவரத்து துறை மூலமாக ரூ.3.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த 884 சாலை விபத்துகளில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் பலவற்றுக்கு கண்கூசும் முகப்பு விளக்குகளும் காரணியாக இருந்துள்ளன. கனரக வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்வதால், வாகனத்தை முந்திச் செல்வதும், எதிர்திசையில் வரும் வாகனத்தின் தூரத்தைக் கணிப்பதும் ஓட்டுநர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

ஒரே வாகனத்தில் கூடுதல் முகப்பு விளக்குகளை பொருத்திக்கொள்கின்றனர். எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து கண்கூசும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, கோவை மாவட்டத்தில் கோவை (மையம்), தெற்கு, மேற்கு, வடக்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக, கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெற்ற ஆய்வில், 3,275 வாகனங்களுக்கு ரூ.3.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 100 வாகனங்களில் கூடுதலாக பொருத்தப்பட்ட விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கோவை (மையம்) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெ.கே.பாஸ்கரன் கூறும்போது, ‘இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடைபெறும் விபத்துகளுக்கு, கண்கூசும் முகப்பு விளக்குகளும் காரணம். தொடர்ந்து அதிக ஒளி திறனுள்ள விளக்குகளை பார்க்கும்போது, ஓட்டுநர்களுக்கு பார்வைத் திறன் குறைபாடு ஏற்படுகிறது. கண்கூசும் விளக்குகளால் எதிரே வரும் வாகனங்கள் மீதோ, முன்னால் செல்லும் வாகனம், சாலையோர பள்ளம், மின்கம்பம், மரங்கள், பாதசாரிகள் மீதோ மோதி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. கனரக வாகனங்களில் பயன்படுத்தப்படும் கண்கூசும் விளக்குகளால் அதிகம் பாதிக்கப்படுவது இருசக்கர வாகன ஓட்டிகள்தான்.

எனவே, சூழலுக்கு ஏற்ப முகப்பு விளக்கின் திறனை கனரக வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும். அதிக கண்கூசும் விளக்கை எரியவிட்டால், முன்னே செல்லும் வாகனத்தை முந்திச் செல்லலாம் என்ற விதி ஏதும் இல்லை. ஆனால், ஓட்டுநர்கள் சிலர் கண்கூசும் விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை வேகமாக முந்திச் செல்ல முயல்கின்றனர். அப்போதுதான் விபத்து ஏற்படுகிறது. வாகனங்களில் கண்கூசும் விளக்குகளை பயன்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x