Published : 24 Nov 2019 09:50 AM
Last Updated : 24 Nov 2019 09:50 AM
மதுரை
மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பாலின் தேவை என்பது மிக முக்கியமானது. பாலில் நச்சுத்தன்மை இருக்கிறது என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் தமிழக பால்வளத்துறை அமைச்சர் அரசு பாலகத்தில் அவ்வாறு இல்லை என்று மறுத்துள்ளார். எது எப்படியாக இருந்தாலும் மக்கள் பயன்படுத்தக்கூடிய பாலில் கலப்படம் செய்யக்கூடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகராஷ்டிராவில் ஒரே இரவில் ஆட்சி அமைத்துள்ளனர். இவ்வளவு அவசர கால கட்டத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதிகாரபூர்வமாகவே ஆட்சிக்கு வந்து இருக்கலாம். இரவோடு இரவாக ஆட்சி அமைத்துள்ளனர். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது.
உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்று முதலில் அறிவிக்கட்டும். அதன்பிறகுதான் மற்று விஷயங்களை பேச முடியும். இதற்காக நாங்கள் குழு அமைத்துள்ளோம் அதன் மூலம் பேசி முடிவு செய்யப்படும்.
அதிசயம் அற்புதம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள்தான் எஜமானர்கள் அவர்கள் தான் தீர்மானிப்பார்கள்.
மக்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். யார் தங்களுக்கான தலைவர் என்று மக்களுக்கு தெரியும். அவர்களை மக்கள் மிகச் சரியான நேரத்தில் தேர்ந்தெடுப்பார்கள்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT