Published : 23 Nov 2019 05:29 PM
Last Updated : 23 Nov 2019 05:29 PM
திருச்செந்தூரில் கொட்டி தீர்த்த கனமழையில் அரசு போக்குவரத்து பணிமனையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் பணிக்கு செல்ல முடியாமல் தவித்த ஓட்டுநர், நடத்துனர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அரசு போக்குவரத்து பணிமனையில் மழைநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் உருவானது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) திருச்செந்தூரில் சுமார் 40 மி.மீ. மழை பதிவானது. இதில், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து மழைநீர் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக அரசு ஐ.டி.ஐ., மற்றும் வீரபாண்டியன்பட்டணம் பகுதியிலிருந்து காற்றாற்று வெள்ளம் புகுந்தது. இதனால் பணிமனையில் மழைநீர் வெளியே செல்ல வழியில்லாமல் குளம் போல் தேங்கியது.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணியிலிருந்து பணிக்கு செல்ல வேண்டிய ஓட்டுநர், நடத்துநர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணிமனைக்கு வந்தனர். அங்கு குளம் போல் தண்ணீர் தேங்கியிருந்ததால், அவர்கள் பணியை புறக்கணித்து பணிமனை வாசலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்தும் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் முத்துராமன் தலைமையில் உதவி ஆய்வாளர் செந்தில் உள்ளிட்ட போலீஸார் அங்கு வந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டனர்.
திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை ஆகிய வெளியூர்களுக்கும், நகர்புற பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே போலீஸார் தரப்பில் தேங்கிய மழைநீரை அகற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில் காலை 10.30 மணிக்கு பிறகு பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகள் மூலம் மழைநீரை அகற்ற ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, மழைநீரை அகற்றும் பணி தொடங்கியது.
அதன்பின்னர் ஓட்டுநர், நடத்துநர்கள் பணிக்கு சென்றனர். சுமார் 5 மணி நேரம் நீடித்த போராட்டத்தால் வெளியூர் செல்ல கூடிய பயணிகள் சிரமமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT