Last Updated : 23 Nov, 2019 02:25 PM

1  

Published : 23 Nov 2019 02:25 PM
Last Updated : 23 Nov 2019 02:25 PM

மகாராஷ்டிராவில் பாஜக இரவோடு இரவாக ஆட்சியமைத்தது ஜனநாயகப் படுகொலை: முத்தரசன் கண்டனம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியைப் பிளவுபடுத்தி இரவோடு இரவாக பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்து ஜனநாயக படுகொலை என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முத்தரசன் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பாஜக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சி, சர்வாதிகாரத்தை விரும்புகிற கட்சி, பாசிஸ கொள்கையுள்ள கட்சி. அப்படிப்பட்ட கட்சி அதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஜனநாயகப் படுகொலைகளை அப்பட்டமாக செய்து வருகிறது. தங்கள் கட்சி ஆட்சி நடத்தாத மாநிலங்களில் பிற கட்சிகள் ஆட்சி நடத்தினால் அந்த ஆட்சியை சதி செய்து கலைத்து வருகிறது

மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையில் மற்ற கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க முற்பட்டபோது தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவுபடுத்தி இரவோடு இரவாக பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்து ஜனநாயக படுகொலை செய்துள்ளது. இதுபோன்று ஜனநாய படுகொலைகள் தொடர்ந்து நடப்பது நமது நாட்டின் இறையாண்மைக்கு நல்லதல்ல.

பாஜக சரிந்து கொண்டிருப்பதை மகாராஷ்ட்ரா தேர்தல் முடிவுகள் காட்டியது பாஜகவின் சர்வாதிகாரப் போக்குக்கு நாட்டு மக்கள் உரிய தண்டனையை உரிய நேரத்தில் வழங்குவார்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் பாலில் அதிக நச்சுத்தன்மை இருப்பதாக மத்திய அமைச்சர் கூறியிருக்கும் நிலையில் இதற்கு தீர்வு காணும் அரசாக தமிழக அரசு இல்லை. எடப்பாடி அரசு குடிதண்ணீர் குறித்தோ, பால் குறித்தோ, பொது மக்கள் பிரச்சினைகள் குறித்தோ கவலைப்படாத அரசாக தமிழக அரசு உள்ளது. இவைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர் பதவிகளை பாஜக,பாமக ,தேமுதிக போன்ற கட்சிகள் அதிக இடங்களைக் கேட்டதால் அதை தடுக்கவே எடப்பாடி அரசு மறைமுக தேர்தலைக் கொண்டு வந்தது எனக் கூறப்படுகிறது.

தங்களை தற்காத்துக் கொள்ளவும் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளில் கைப்பற்றி விடவேண்டும் என்ற குறுகிய உள்நோக்கத்தோடு அதிமுக அரசு மறைமுக தேர்தலை கொண்டு வந்துள்ளது" என குற்றஞ்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x