Published : 23 Nov 2019 10:18 AM
Last Updated : 23 Nov 2019 10:18 AM

புதுவை அரசு மருத்துவமனைகளில் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருந்துகள் தட்டுப்பாடு: நோயாளிகள் அதிகரிப்பு - ஊழியர்கள் பற்றாக்குறை

ஒதியஞ்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்தா மையம். படம்: எம்.சாம்ராஜ்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி

அரசு மருத்துவமனைகளில் ஆங்கில மருத்துகள் மட்டுமில்லாமல் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி பிரிவுகளில் மருந்து தட்டுப்பாடு அதிகரித்து நோயா ளிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நோயாளிகள் வருகை அதிகரித்துள்ள சூழலில் ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

புதுச்சேரியில் சுகாதாரத்துறை மூலம் 1970-களில் இந்திய முறை மருத்து வமான சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகள் அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. கடந்த 1992-ல் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோ பதிக்கென்று தனி இயக்குநரகத்தை புதுவை அரசு ஏற்படுத்தியது. அதன் பின்னர் பொது மருத்துவமனை கட்டிடத்திலிருந்து செஞ்சி சாலையில் உள்ள மார்பு நோய் மருத்துவமனையில் முதல் தளத்தில் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ பிரிவுகள் மாற்றப்பட்டு இயங்கி வருகின்றன. இதனுடன் பஞ்சகர்மா, வர்மம், தொக்கணம் சிகிச்சை பிரிவுகளும் துவங்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆங்கில மருத்துவத்தை போன்று இந்திய முறை மருத்துவத்துக்கும் மக்களி டம் தற்போது முக்கியத்துவம் அதிகரித் துள்ளது. படிப்படியாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்தா, ஆயுர் வேதம், ஹோமியோபதி ஆகிய மருத் துவ பிரிவுகளில் குறைந்தப்பட்சம் ஏதேனும் ஒரு பிரிவு உள்ளது. ஆனால் சுகாதாரத் துறை இப்பிரிவுகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. அத்துடன் மருந்து களும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியமுறை மருத் துவ வட்டாரங்களில் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60 இடங்களில் இப்பிரிவுகள் உள்ளன. ஆயுர்வேதம்- 21, சித்தா- 22, ஹோமியோபதி- 16, பஞ்சகர்மா ஒரு இடத்திலும் செயல்படுகின்றன. நிரந்தர மருத்துவர்களாக 6 பேர், ஒப்பந்த மருத்துவர்களாக 15 பேர், தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் 39 பேர் என மொத்தம் 60 மருத்துவர்களும், நிரந்தர மருந்தாளுநர்களாக 22 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இத்துறைக்கென்று புதுவை அரசு தனியாக நிதி ஒதுக்குவதில்லை. சுகாதாரத் துறைக்கு ஒதுக்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியும், ஆதிதிராவிட மக்களுக்கான சிறப்பு கூறு நிதியிலிருந்து ஒரு பகுதியும் இத்துறைக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி தருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை மொத்தமாக மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக சுகாதாரத்துறையும் போதிய நிதியை ஒதுக்கவில்லை. இதனால் மொத்தமாக மருந்து கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது அத்தியாவசிய தேவைக்காக குறைந்த அளவு மருந்துகளை வாங்கி நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றனர். மருந்து தட்டுப்பாடு பிரச்சினை ஏற்படு வதால், நோயாளிகள் கடும் அவதிக் குள்ளாகின்றனர். போதிய நிதி ஒதுக்கி மருந்துகளை சரியாக தர வேண்டும் என் கின்றனர்.

நோயாளிகள் தரப்பில் விசாரித்தபோது, “இந்தியமுறை மருத்துவத்துக்கு விழிப் புணர்வு ஏற்பட்டு சிகிச்சைக்காக வருகி றோம். முதலில் மருந்து இல்லை என்கின் றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 8 மணி முதல் 2 மணி வரை சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் தாமதமாகத்தான் மருத்துவர்கள் பணிக்கு வருகின்றனர். அதை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. மருந்தாளுநர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மற்ற நாட்கள் வேறொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பணிபுரியும் நிலை உள்ளதையும் சரி செய்ய வேண்டும்” என்றனர்.

மருத்துவர்கள் அதிருப்தி

மருத்துவர்கள் தரப்பில் விசாரித்த போது, “சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோ பதி ஆகிய பிரிவுகளில் ஒப்பந்த அடிப் படையில் 15 பேர் மருத்துவர்களாக பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். அவர்க ளுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் தரப்படுகிறது.

மருத்துவர்கள் கீழ் பணியாற்றும் நிரந்தர மருந்தாளுநர்கள் ஊதி யம் மருத்து வர்களை விட அதிகம். இதனால் மருத்துவர் களிடம் அதிருப்தி உள்ளது. பணி நிரந்தரம் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை” என்றனர்.

என்னவானது ஆயுஷ் மருத்துவமனை?

சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகை யில், “ஆயுஷ் மருத்துவமனை முதலில் கோரிமேட்டில் அமையவுள்ளதாக கூறப்பட்டது. பின்னர் ஏனாமில் கட்டப் போவதாக தகவல் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, வில்லியனூர் மற்றும் ஏனாம் ஆகிய 2 இடங்களிலும் ஆயுஷ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிப்பு வெளியானது.

அதன்படி ஏனாமில் ஆயுஷ் மருத்துவமனை கட்டும் பணிகள் துவங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் வில்லியனூரில் ஆயுஷ் மருத்துவமனை என்பது வெறும் அறிவிப்போடு உள்ளது. இதற்கு காரணம் சுகாதாரத்துறை அமைச்சர் ஏனாமை சேர்ந்தவர்” என்று குற்றம் சாட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x