Published : 22 Nov 2019 04:21 PM
Last Updated : 22 Nov 2019 04:21 PM
தேனி
ஐயப்ப பக்தர்கள் கொண்டு வரும் சிலிண்டர்கள் தீர்ந்துவிட்டால் ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தைக் காட்டி காஸ் நிரப்பிய சிலிண்டரை அந்தந்த ஊர்களில் பெற்றுக் கொள்ளும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்படுத்தித் தந்துள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடைதிறக்கப்பட்டது. மறுநாள் முதல் நிர்மால்யபூஜை, சந்தன, நெய் அபிஷேகம், தீபாராதனை, உச்சபூஜை, படிபூஜை என்று தொடர்ந்து பல்வேறு வழிபாடுகள் தினமும் நடைபெற்று வருகிறது.
டிச.27ல் மண்டலபூஜை நடைபெறுகிறது. இதற்காக ஐயப்பனுக்கு தங்கஅங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து ஜன.15ம் தேதி மகரவிளக்கு பூஜையும் இடம்பெறுகிறது. இதற்காக தொடந்து மகரவிளக்கு வரை கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
மாதம்தோறும் நடைதிறக்கப்பட்டாலும் மண்டல, மகரவிளக்கு பூஜை சபரிமலையின் உச்சநிகழ்வாக கருதப்படுகிறது.
இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து குழுவாக பலரும் வருகின்றனர். பெரும்பாலும் வாடகை வாகனங்கள் அமர்த்தி இவர்கள் பயணிக்கின்றனர். விரதம் இருப்பதால் பலரும் சொந்தமாக சமையல் செய்து உண்பதையே விரும்புகின்றனர். இதற்காக ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சமையல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களுக்காக காஸ் ஏஜன்சிகள் சில சலுகைகளை அளித்துள்ளன. இதன்படி பக்தர்கள் கொண்டு வரும் சிலிண்டர்கள் காலியாகிவிட்டால் அவற்றைக் கொடுத்து கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளன.
இதற்காக கட்டுப்பாடுகளை தளர்த்தி ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தைக் காட்டி புதிய சிலிண்டர்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளன.
இது குறித்து ஏஜன்சி உரிமையாளர் சம்பத் கூறுகையில், சபரிமலைக்கான முக்கிய வழித்தடம் என்பதால் தேனி வழியே பக்தர்கள் அதிகளவில் சென்று கொண்டிருக்கி்னறனர்.
விரத நேரத்தில் சொந்த சமையலையே பலரும் விரும்புவர். தூரமான ஊர்களில் இருந்து வரும் போது கேஸ் தீர்ந்துவிட வாய்ப்புள்ளது. எனவே பக்தர்கள் காலி சிலிண்டரை கொடுத்துவிட்டு புதியதை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
தற்போது பலரும் சிறிய அளவில் உள்ள 5கிலோ சிலிண்டரையே பயன்படுத்துகின்றனர். சிறிய இடத்தில் வைத்துக் கொள்ளும் வகையில் இருப்பதாலும், கையாள எளிதாக இருப்பதாலும் இவற்றையே போக்குவரத்திற்கு கொண்டு செல்கின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் இந்த சலுகையை அறிவித்துள்ளன. சபரிமலை நேரத்தில் இத்திட்டம் குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
பக்தர்கள் மட்டுமல்லாது வெளியூரில் இருந்து இங்கு வந்து தங்கியுள்ளவர்கள், சுற்றுலா செல்பவர்களும் இது போன்று சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம். இது வணிகரீதியான மானியம் இல்லாத சிலிண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக சபரிமலை வழித்தடங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT