Published : 22 Nov 2019 11:47 AM
Last Updated : 22 Nov 2019 11:47 AM
சர்வாதிகாரப் போக்கைத் தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டப்பேரவைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற சிறப்பு குறைதீர் கூட்டத்திற்கு, அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டப் பொறுப்பாளருமான நா.கார்த்திக் எம்எல்ஏவுக்கு தகவல் தரப்படவில்லை என கூறப்படுகிறது. எனினும், அந்த முகாமில் பங்கேற்க நா.கார்த்திக் எம்எல்ஏ சென்றுள்ளார்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்குச் சென்ற எம்எல்ஏ கார்த்திக்கை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். முகாமில் பங்கேற்று, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை கொடுக்கப் போவதாக எம்எல்ஏ தெரிவித்தும், போலீஸார் அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அங்கு வந்த மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், எம்எல்ஏவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கார்த்திக் எம்எல்ஏ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (நவ.22) அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "வேலூரில் சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமாரை ஆளும்கட்சி மிரட்டியதுபோல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்குச் சென்ற சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக்கும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை?
சர்வாதிகாரப் போக்கைத் தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT