Published : 22 Nov 2019 10:09 AM
Last Updated : 22 Nov 2019 10:09 AM

தலைமை தகவல் ஆணையர் பதவியேற்பு: ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.ராஜகோபாலுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உடன் தலைமை செயலர் கே.சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்.

சென்னை

மாநில தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஷீலா பிரியாவுக்கு 65 வயது பூர்த்தியானதால், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய தலைமை ஆணையரை தேர்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, தகுதியான சிலரின் பெயரை அரசுக்கு பரிந்துரைத்தது.

அந்தப் பட்டியலை முதல்வர் பழனிசாமி, அமைச்சர் டி.ஜெயக்குமார், பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் ஸ்வர்ணா ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு ஆய்வு செய்து, அதிலிருந்து 3 பேரை தேர்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதில், ஆளுநரின் செயலராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆர்.ராஜகோபாலை தலைமை தகவல் ஆணையராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த 19-ம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் கே.சண்முகம், தலைமை தகவல் ஆணையர் ராஜகோபாலின் மனைவியும், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை பயிற்சிப் பிரிவு தலைமை இயக்குநருமான மீனாட்சி ராஜகோபால், பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் எஸ்.ஸ்வர்ணா, மாநில தகவல் ஆணையர்கள் எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்குமார், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், ஆர்.தட்சிணாமூர்த்தி, ஜி.முருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x