Published : 22 Nov 2019 09:53 AM
Last Updated : 22 Nov 2019 09:53 AM

சுற்றுச்சூழல் மாசு எனும் பேராபத்து; தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகின்றது: நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சு

வைகோ: கோப்புப்படம்

டெல்லி

சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் இருந்து மக்களைக் காத்திட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி சுற்றுச்சூழல் மாசு குறித்து, நேற்று (நவ.21) மாநிலங்களவையில் நடைபெற்ற கவன ஈர்ப்புத் தீர்மான விவாதத்தில், வைகோ பேசியதாவது:

"உலகில் தண்ணீர், காற்று, சுற்றுச்சூழல் எல்லாமே மாசு அடைந்து வருகின்றன. கூடுதலாக ஒலி மாசுவும், மனிதர்களைப் பாதிக்கின்றது. டெல்லி சுற்று வட்டாரத்தில் காற்று மாசு அடைந்ததற்கு, ஆப்கானிஸ்தான் காரணம் என்றும், பாகிஸ்தான் வழியாக வருகிறது என்றும் ஐஐடி நிறுவனம் ஆராய்ச்சி அறிக்கை தந்திருக்கின்றது. அந்த அறிக்கை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

வைக்கோலை எரிப்பதால் ஏற்படுகின்ற மாசினால்தான், டெல்லியும், சுற்று வட்டாரங்களும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கின்றன என்பது உண்மை அல்ல; விவசாயிகள் மீது பழி போடுவது நியாயம் அல்ல.

உலகில் அதிக மாசு அடைந்த நகரங்களுள் 14 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 3 விநாடிகளுக்கு ஒரு குழந்தை, மாசு மூட்டத்தால் உயிரிழப்பதாக, உலக நோய்ச்சுமை ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. அப்படியானால், இந்தப் பிரச்சினையை நாம் வாதிட்டுக் கொண்டு இருக்கின்ற இந்த 120 நிமிடங்களில், எத்தனைக் குழந்தைகள் இறந்து போவார்கள்?

தமிழ்நாட்டில் இன்னும் இரு மாதங்களில் நெற்பயிர் அறுவடை நடைபெறும். நெற்பயிரைத் தரையோடு தரையாக அறுத்து வைக்கோல் ஆக்குகின்றோம். பெரும்பகுதி மாடுகளுக்குத் தீவனம் ஆகின்றது. மாடுகள் தருகின்ற சாணத்தை உரம் ஆக்கினால் மண் வளம் பெருகும், விவசாயம் செழிக்கும் என எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை கூறுகின்றது.

குடிசை வீடுகளுக்குக் கூரை வேயவும் வைக்கோலைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால், எரிப்பது இல்லை. எனவே, நெற்றி வியர்வை நிலத்தில் விழப்பாடுபட்டு உழைத்து உலகுக்கு உணவு தருகின்ற விவசாயிகள் மீது பழி போடாதீர்கள்.

தமிழ்நாட்டை வானத்தில் இருந்து பார்த்தால், பச்சைப் பசேலெனக் காட்சி அளிக்கும். அவை எல்லாம் பயன் தரும் செடி கொடிகள் அல்ல. சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடு விளைவிக்கும் வேலிக்காத்தான் எனப்படும் 'ஜூலி புளேரா' மரங்கள் ஆகும். இதன் விளைவுகளைப் பற்றித் தெரியாமல், ஐம்பதுகளில் தமிழ்நாட்டில் கொண்டு வந்து விதைத்து விட்டார்கள். வேலிக்காத்தான் மரங்கள், நிலத்திற்குள் 100 அடி ஆழத்திற்கு வேர் ஊன்றும். உயிர்க்காற்றை உறிஞ்சி கறிக்காற்றைத்தான் வெளியிடும்.

எனவே, இம்மரத்தில் பறவைகள் கூடு கட்டுவது இல்லை. ஆடு மாடுகளும் அம்மரங்களை நெருங்குவது இல்லை. இன்றைக்குத் தமிழ்நாட்டுக்கே பெருங்கேடு, சீமைக் கருவேலம் எனப்படும் வேலிக்காத்தான் மரங்களே ஆகும். இவற்றை அகற்றுவதற்காக விவசாயிகளைத் திரட்டி ஒரு இயக்கம் நடத்தினேன். உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தேன். சிறிது காலம் அரசும் அக்கறை காட்டியது. இப்போது வழக்கு நிலுவையில் இருக்கின்றது.

தமிழ்நாட்டில் மாசு படர்வதற்குப் பேராபத்து, மத்திய அரசின் திட்டங்களாகத்தான் இருக்கின்றன. மீத்தேன், ஹைட்ரோகார்பன், பாறைப் படிம எரிகாற்றுத் திட்டங்களால், தமிழ்நாட்டின் காவிரி தீரம் நாசம் ஆகும். மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டங்களால், சுற்றுச்சூழல் மாசு எனும் பேராபத்து, தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகின்றது. கர்நாடக மாநிலத்தினர், காவிரித் தண்ணீர் கொடுப்பது இல்லை என்ற முடிவில் இருக்கின்றார்கள்.

இன்று இந்த விவாதத்தில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துத்தான் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். மாசு அடர்த்திப் புகை, அனைத்து மக்களையும் பாதிக்கின்ற பிரச்சினை ஆகும். அதனைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள், மக்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்".

இவ்வாறு வைகோ பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon