Published : 21 Nov 2019 12:45 PM
Last Updated : 21 Nov 2019 12:45 PM

இன்று உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம்: 2030-ல் ஆண்டில் அதிக இறப்புக்கு காரணமாகப் போகும் 3-வது நோய்

மதுரை

ஒய். ஆண்டனி செல்வராஜ்

வரும் 2030-ம் ஆண்டில் அதிக மான மனித உயிரிழப்புக்கு காரணமாகப் போகிற நோய்கள் பட்டியலில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் 3-வது இடத்தை பிடிக்க உள்ளது.

‘நாள்பட்ட நுரையீரல் அடைப்பு’ (COPD) நோய் பாதித்தவர்களுக்கு வாழ்க்கையே சிரமமானதுதான். இவர்கள் சுவாசிப்பதற்கே மிகவும் சிரமப்படுவர். இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக நாள்பட்ட நுரை யீரல் அடைப்பு நோய் தினம் ஆண்டுதோறும் நவ.21-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இது குறித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் ஜி.வேல்குமார் கூறியதாவது: ‘‘2030-ம் ஆண்டில் அதிகமான மனித இறப்புக்கு காரணமாக உள்ள நோய்கள் பட்டியலில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் 3-வது இடத்தை பிடிக்கப் போகிறது.

வழக்கமான சுவாச முறையில், நாம் நல்ல காற்றை உள்ளே இழுத்து கெட்ட காற்றை வெளியே விடுவோம். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட் டவர்களுக்கு சுவாசக் குழா ய்கள், சின்னச் சின்ன காற் றுக் குழாய்கள் தேய்மானம் அடைகின்றன.

நுரையீரலின் விரிவுத் தன்மை பாதிக்கப்பட்டு வழக்கமான சுவாசம் பாதிக்கப்படுகிறது. பொதுவாக 40 வயதைக் கடந்தவர்கள் புகைப் பிடித்தல், மாசுபட்ட காற்று, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை, முறையற்ற உணவுப் பழக்கத்தால் இந்நோயால் பாதிக்கப்படுவர். 2-வது முக்கியக் காரணி, சுற்றுச்சூழல் சீர்கேடு. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் சிகரெட், புகையிலையை விட புகை அடுப்பு மற்றும் காற்று மாசுபாட்டால் இந்நோய் அதிகமாக வருவதாகக் கண்டறிந்துள்ளனர்.

நாள்பட்ட இருமல், சளி, மூச்சு அடைப்பு உள்ளவர்களுக்கு ஸ்பைரோ மெட்ரி பரிசோதனை செய்து நுரையீரல் திறனை கண்ட றியலாம்.

இதில், நுரையீரல் விரிவுத் தன்மையை வைத்து, நுரையீரல் பாதிப்பைக் கண்டறியலாம். ஆனால், இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால், ஒரு சிறிய விஷயத்தை நம்மால் செய்ய முடியுமா? என்ற ஏக்கத்தை இந்த நோயாளிகளுக்கு குறைத்து நம்மாலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

சிகிச்சை மேற்கொள்ளாமல் நாள்பட்ட நுரையீரல் பிரச்சி னைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் அது இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கும். மன அழுத்தமும் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். மதுரை அரசு மருத்துவமனை நுரையீரல் மருத்துவ நிபுணர் இளம்பரிதி கூறியதாவது:

‘‘இந்த நோய் புகைப்பிடிப் பவர்களுக்கு மட்டுமில்லாது, புகைப்பிடித்து விட்டு வீட்டுக்கு வந்தால் குழந்தைகளையும் பாதிக் கும் அபாயம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் சுருங்கி விடுவதால் காற்று உள்ளே போய் வர சிரமப் படும். தொடர்ந்து இருமல், கடின வேலை செய்வதற்கு மூச்சுவாங்க ஆரம்பிக்கும். போக போக சாதாரணமாக குளிப்பதற்கும், எழுந்து நடப்பதற்குமே மூச்சு வாங்க ஆரம்பிக்கும்.

ஒரு கட்டத்தில் அமைதியாக உட் கார்ந்து இருக்கும்போதே மூச்சுவிட சிரமம் ஏற்படும். புகைப்பிடிப்பதை நிறுத்துவதே, இந்த நோயைக் கட்டுப்படுத்த முதல் சிகிச்சை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் கிரேடு-1, கிரேடு-2, கிரேடு-3, கிரேடு-4 ஆகிய 4 நிலைகளில் சேதமடைகிறது. தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும், குணப்படுத்த முடியாது. ஆனால், நோயாளிகளை சிரமம் இல்லாமல் இருக்க வைக்கலாம் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x